யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற வீட்டுத்திட்டக் கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) கையளிக்கப்பட்டது.
கல்லுண்டாயில் சுமார் 103 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். தாழ்நிலப் பகுதியான இங்கு மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், நீண்ட நாட்களுக்கு நீர் தேங்கி நிற்கும் அவலமும் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்களின் இத்துயர நிலை தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஆளுநர் அவர்கள், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டறிக்கையைத் தயாரித்துத் தருமாறு இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் (IESL) வடக்குப் பிராந்தியக் கிளையிடம் (Vadakkin Chapter) கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆளுநரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் வடக்குப் பிராந்தியப் பொறியியலாளர்களால் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ‘கல்லுண்டாய் வெள்ளத் தணிப்புச் செயற்றிட்ட முன்மொழிவு’ ஆவணமே ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த ஆவணம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, இதற்கான பொருத்தமான நிதி மூலங்களை எங்கு பெற்றுக்கொள்வது மற்றும் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களை எவ்வாறு ஒருங்கிணைத்து வினைத்திறனாகச் செயற்படுவது என்பன தொடர்பில் ஆளுநர் தலைமையில் விரிவான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
பொறியியலாளர்களால் முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டமானது மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டப் பணிகளுக்காக 95 மில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 100 மில்லியன் ரூபாவும், மூன்றாம் கட்டப் பணிகளுக்காக 105 மில்லியன் ரூபாவும் செலவாகும் என ஆரம்பக்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், கல்லுண்டாய் கிராமத்தில் ஏற்படும் பருவகால வெள்ளப்பெருக்கு முற்றுமுழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதுடன், மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படும். அத்துடன், மழைக் காலங்களில் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் உறுதிப்படுத்தப்படுவதுடன், அப்பிரதேசத்தின் சுகாதார நிலைமைகளும் பொதுமக்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், மானிப்பாய் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர், சபையின் செயலாளர், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




