எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும், உலக வங்கியின் முதற்கட்ட அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் குருநகர் மீன்பிடித் துறைமுகம் ஆகிய செயற்றிட்டங்கள் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) நடைபெற்றது.
இச்சந்திப்பின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு உலக வங்கிக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக, இவ்விரு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அந்த வகையில், முதற்கட்ட அபிவிருத்திக்காக வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதான இடங்களையும் உலக வங்கிக் குழுவினர் தற்போது நேரில் பார்வையிட்டுள்ளனர்.
சுற்றுலாவிகள் அதிகளவில் வருகைதரும் இடமாக யாழ்ப்பாணக் கோட்டை விளங்குகின்றது. எனினும், அங்கு வரும் சுற்றுலாவிகளை மேலும் ஈர்க்கக்கூடிய வகையிலான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் அங்கு போதியளவில் இல்லை. அவை உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதேபோன்று, எமது மாகாணத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகக் குருநகர் மீன்பிடித் துறைமுகமும் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அத்துடன், எமது மாகாணத்தின் சார்பில் நாம் முன்னுரிமைப்படுத்தியுள்ள ஏனைய முக்கிய திட்டங்களை உலக வங்கியின் இரண்டாம் கட்டச் செயற்றிட்டங்களில் உள்ளடக்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். தனது இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்தில் எவ்வாறான வளங்களும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கான உலக வங்கியின் உதவிகள் பிரதான 5 துறைகளின் கீழ் அமையவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்கள் தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





