சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளை இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதப் பிரதேசமான திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்’ மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘மேட் இன் முல்லைத்தீவு’ (Made in Mullaitivu) ஆகிய இரு நிலையங்களையும் இன்று சனிக்கிழமை (14.03.2026) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், ‘போரால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக நான் பொறுப்பேற்றபோது, ஒன்றுமேயில்லாத அடிமட்டத்திலிருந்தே மாவட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. அன்று மாவட்டச் செயலாளராக இருந்து என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். வடக்கு மாகாணத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான, அதிக வளங்களைக் கொண்ட மாவட்டம் முல்லைத்தீவாகும். ஆனால், வறுமையின் பிடியிலும் இதுவே முதலிடத்தில் இருக்கின்றது. இதனை மாற்றியமைப்பதற்கு இவ்வாறான தொழில்முயற்சிகள் நிச்சயம் கைகொடுக்கும். இங்கு அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழும் நிலையில், அவர்களை வாழ்வாதார ரீதியில் உயர்த்திவிட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இதற்குப் பெரும் பங்களிப்புச் செய்யும் கனேடியத் தமிழர் பேரவைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்,’ என்றார்.
மேலும், குறித்த காணி ஒதுக்கீடு தொடர்பில் நினைவுகூர்ந்த ஆளுநர், ‘இந்த இடம் மிகவும் பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மாவட்டச் செயலாளராக நான் பணியாற்றிய காலத்திலேயே திருமுறிகண்டி ஆலயத்திற்கு அருகிலுள்ள இந்தக் காணியைச் சிவபூமி அறக்கட்டளைக்கு வழங்கினேன். பின்னர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்குக் கையளிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இந்தக் காணிகளைப் பாதுகாத்துப் பொருத்தமானவர்களுக்கு வழங்குவதற்கு நாம் பாரிய சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டோம். அந்த அதிகூடிய அழுத்தங்களுக்கு மத்தியில்தான் நாம் இந்தக் காணிகளைப் பாதுகாத்தோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், இரண்டாம் உலகப் போரின் பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து ‘மேட் இன் ஜப்பான்’ என்ற வர்த்தக நாமத்தை உலகப் புகழடையச் செய்ததைப் போன்று, போரிலிருந்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘மேட் இன் முல்லைத்தீவு’ என்ற நாமமும் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைய வேண்டும் எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூரல் ஜெனரல் ஸ்ரீ சாய்முரளி, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பூரண ஒத்துழைப்புடனும், கனேடியத் தமிழர் பேரவையின் நிதியுதவியுடனும், வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பிலும் இந்தச் செயற்றிட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விசேட நிகழ்வில், வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பிரதீபன், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி திருமதி அபிராமி கைலாசபிள்ளை, உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், கனேடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டன்டன் துரைராஜா, கனேடியத் தமிழர் பேரவையின் மனிதாபிமானத் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் துஷ;யந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





