முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் இவ்வாண்டைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (12.09.2026) சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு ஏற்ப பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை காணப்படுவது தமக்குத் தெரியும் எனத் தெரிவித்த அமைச்சர், இதனை நிவர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அரசாங்கமும் தேவையான ஆட்சேர்ப்புகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதற்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதியை குறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் ‘வடக்கின் வசந்தம்’ போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஒதுக்கப்படும் நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கான தயார்நிலையில் மாகாண நிறுவனங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற முரண்பாடுகள் மற்றும் போரால் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகளை அடுத்த தலைமுறையும் எதிர்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், அனைவரும் ஒன்றிணைந்து முரண்பாடுகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாடு தற்போது பொருளாதார உறுதிப்பாட்டை நோக்கிப் பயணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் அரச சொத்துகளை விற்பனை செய்வதையோ, பணத்தை அச்சிடுவதையோ அல்லது அதிகளவில் கடன் பெறுவதையோ தவிர்த்து, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துதல், ஏற்றுமதியை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் திறைசேரி வருவாயை வலுப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையை வலுப்படுத்துதல், மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல், சிறந்த கழிவு முகாமைத்துவத்தை உருவாக்குதல் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே அரசாங்கம் நிதியை முன்னுரிமையுடன் செலவிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் போதுமான நிதி வளம் காணப்பட்டமையாலேயே டித்வா பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கத்தால் உடனடியாக நிதி வழங்க முடிந்ததாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது ஏற்றுமதி மூலம் கிடைக்கும் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்காலத்தில் 15 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
திறைசேரியில் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனத் தெரிவித்த அவர், அந்த நிதியை மக்களின் தேவைகளுக்காக அடிமட்டம் வரை கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறினார். மாவட்டச் செயலகங்கள், மாகாண சபைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மக்களின் தேவைகளை இனங்கண்டு அதற்கேற்ப நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் நிலையில், அரச ஊழியர்களின் நலன்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2027 ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரவுள்ள அடிப்படைச் சம்பளத்தையே அடிப்படையாகக் கொண்டு தற்போது மேலதிக நேரக் கொடுப்பனவு கணக்கிடப்படுவதாகவும், அந்தக் காலப்பகுதியில் ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியமும் 2027ஆம் ஆண்டுக்கான அடிப்படைச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புகள் பெரும்பாலும் கொடுப்பனவுகளாக இருந்த நிலையில், தமது அரசாங்கம் அடிப்படைச் சம்பளத்தையே அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு முழுவதும் சுமார் 350,000 ஆளணி வெற்றிடங்கள் காணப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு 35,000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை நிருவாக சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, கணக்காளர் சேவை, பொறியியல் சேவை உள்ளிட்ட அரச சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 125,000 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டில் முறையான ஆட்சேர்ப்புகள் இடம்பெறாத நிலை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, திணைக்களத் தலைவர்கள், ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களிடம் காணப்படும் பல வாகனங்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானவை எனத் தெரிவித்த அமைச்சர், சுமார் 2,000 புதிய வாகனங்களில் ஒரு தொகுதியையாவது இவ்வாண்டு இறுதிக்குள் இறக்குமதி செய்து திணைக்களங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான எதிர்பார்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகள் வினைத்திறனுடனும் பொறுப்புணர்வுடனும் அமைய வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இருந்து அதிக செலவு செய்து அலுவலகங்களுக்கு வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லாத வகையில், அவர்கள் நாடி வரும் சேவையை உரிய முறையில் வழங்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.
அரச சேவைகள் இனம், மதம், மொழி, கட்சி உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடும் இன்றி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உள்ளூராட்சி வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை மக்களுக்கு தெளிவாக அறிமுகப்படுத்துவதுடன், மக்களின் தேவைகளை அவர்களைத் தேடிச் சென்று இனங்கண்டு சேவைகளை வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாகாண சபை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 99 சதவீதத்தை செலவிட்டுள்ளமைக்கு மாகாணத்தின் அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்திலும் ஒதுக்கப்படும் நிதியை அதேபோன்று வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், நிர்வாகம் மற்றும் நிதிக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.