மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

கல்வி அறிவை மட்டும் வழங்குவதால் ஒரு மனிதன் முழுமையடைவதில்லை, நல்ல குணம், தலைமைத்துவப் பண்பு மற்றும் பிறருக்காகப் பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் மாணவர்கள் வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா – 2026 இன் முதலாம் நாள் நிகழ்வு இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வட்டு மத்திய கல்லூரி, தனது நூற்றாண்டை எட்டியிருப்பது ஒரு எண்ணிக்கையை மட்டும் குறிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், நூற்றாண்டு காலமாக இப்பாடசாலையின் வளர்ச்சிக்குப் பங்களித்த முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்தினரின் கூட்டு முயற்சியாலேயே இந்த நீண்ட வரலாற்றுப் பயணம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாணவர்களின் வளர்ச்சி வகுப்பறைக் கல்வியுடன் மட்டுப்படக்கூடாது எனத் தெரிவித்த ஆளுநர், விளையாட்டு, கலை, விவாதம், தலைமைத்துவச் செயற்பாடுகள், நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதன் ஊடாகவே மாணவர்கள் தங்களுக்குள் உள்ள ஆற்றல்களையும் தலைமைத்துவப் பண்புகளையும் அடையாளம் காண முடியும் எனக் குறிப்பிட்டார்.

இன்றைய தலைமுறை தகவல்கள் நிறைந்த உலகில் வாழ்கின்றது எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், கையடக்கத் தொலைபேசிகள் சில நொடிகளில் பெருமளவு தகவல்களை வழங்கினாலும், கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் உண்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார். எனவே, உண்மையையும் பொய்யையும் பிரித்தறியும் சுயசிந்தனையை வளர்த்துக்கொள்வது அவசியம் என வலியுறுத்திய அவர், புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கிராமப்புறப் பாடசாலைகள் பின்தங்கிய பாடசாலைகள் என்ற பார்வையும் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், சிறந்த கல்விச் சாதனைகள் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்பட்டவை அல்ல என்பதை அண்மைய சாதனைகள் எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, வலிகாமம் கல்வி வலயத்தின் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ;ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர் சுரேந்திர சபின், 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 188 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற சாதனையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாணவர்களின் வெற்றியை மதிப்பெண்களால் மாத்திரம் மதிப்பிடாமல், அவர்கள் எத்தகைய மனிதர்களாக உருவாகின்றனர் என்பதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், நல்ல கல்வியுடன் நல்ல குணம், நல்ல தலைமைத்துவம் மற்றும் பிறருக்காக வாழும் மனப்பான்மை ஆகியவற்றையும் மாணவர்களிடம் வளர்ப்பது அவசியம் என வலியுறுத்தினார்.

வட்டு மத்திய கல்லூரி தனது அடுத்த நூற்றாண்டிலும் பல தலைமுறைகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் முக்கிய கல்விக் கோட்டையாகத் திகழ வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுக்களையும், பரிசில்களைப் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்கள் இன்னியம் அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதுடன், தொடர்ந்து கல்லூரியின் நிறுவுநர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. மேடை நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஆளுநர் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். இதன்போது மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இன்றைய முதலாம் நாள் நிகழ்வில் வலிகாமம் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நாளையும் நாளை மறுதினமும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.