“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன

வடக்கு மாகாணத்திலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரம் உயர்த்துவது அல்லது இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள சில பிரதேச சபைகளைப் பிரித்து புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது தொடர்பில், அவற்றை எதிர்காலத்தில் வினைத்திறனுடன் நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி வல்லமை உறுதியாகக் காணப்படுமாயின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (12.09.2026) சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் தற்போதைய பணிகள், முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில், தற்போது சுமார் ஐந்து மடங்கு அதிகமான நிதியை திணைக்களம் கையாளும் நிலையில், அதற்கேற்ப தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும், பணிச்சுமைக்கேற்ப தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கும் உள்ளூராட்சி ஆணையாளரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வருமானப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஆளணி வெற்றிடங்களும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில், இத்தகைய ஆளணி பற்றாக்குறை வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்ட பிரச்சினையல்ல் நாடு முழுவதும் இந்நிலை காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாணத்திலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரம் உயர்த்துவது, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள சில பிரதேச சபைகளை இரண்டாகப் பிரித்து புதிய பிரதேச சபைகளை உருவாக்குவது உள்ளிட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான சில முன்நகர்வுகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், உள்ளூராட்சி மன்றமொன்றைத் தரம் உயர்த்துவதோ அல்லது புதிய உள்ளூராட்சி மன்றமொன்றை உருவாக்குவதோ தனித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இருக்க முடியாது, அவற்றை எதிர்காலத்தில் நிர்வகித்து கொண்டு செல்லத் தேவையான நிதி வல்லமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அவ்வாறு உரிய நிதி வளம் இருப்பின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் முன்மொழிவுகளை அனுப்பி வைக்கலாம் எனவும், அவை உரிய முறையில் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி சட்டங்கள் பலவும் பழைமையானவையாக இருப்பதாக உள்ளூராட்சி ஆணையாளரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தற்போதைய சமூக மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் திருத்த வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது. மாற்றம் செய்யப்பட வேண்டிய சட்டப் பிரிவுகள் மற்றும் தேவையான திருத்தங்கள் தொடர்பிலான பரிந்துரைகளைத் தொகுத்து அனுப்பி வைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் தீயணைப்புச் சேவைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் யாழ். மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலும் தீயணைப்புப் பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களில் வெளிவாரி பணியாளர்களாகக் கடமையாற்றி வரும் பணியாளர்களை நிரந்தர சேவையில் உள்ளீர்ப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதற்கான உரிய கோரிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டதுடன், வடக்கு மாகாணத்துக்குத் தனித்துவமான வகையில் இப்பிரச்சினை காணப்படுவதை உணர முடிவதாகவும், இதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான வாகனங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் வளத் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், நிர்வாகம் மற்றும் நிதிக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.