பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கௌதாரிமுனையைச் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் விசேட வரைவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, இத்திட்டத்திற்கான முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின்போது, குறித்த பிரதேசத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் இத்திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், இலங்கைச் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் பிரதிநிதிகளையும் அழைத்து, அவர்களுடன் இது குறித்து விரிவான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரி பிரதேச செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.