யாழ்ப்பாண மாவட்டத்தினுள் சேவையில் ஈடுபடும் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து, ஒழுங்குமுறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, குறித்த இரு வழித்தடங்களிலும் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதற்குத் தீர்வாக, எதிர்காலத்தில் எவ்வாறு ஒழுங்குமுறையான சேவைகளை முன்னெடுப்பது என்பது குறித்தும், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆழமாக ஆலோசிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் நாளை சனிக்கிழமை (27.06.2026) இரு சங்கப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு, போக்குவரத்துச் சேவைக்கான பிரத்தியேக இடங்களை அடையாளப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் குறித்த இரு வழித்தட பேருந்துச் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

