வருமானப் பரிசோதகர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் என 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளுமே நேர்மையாகச் சேவையாற்றுபவர்களை விமர்சிப்பார்கள். எனவே, இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நீங்கள், இவ்வாறான விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாது மக்களுக்காக நேர்மையான சேவையை முன்னெடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களத்துக்கான 10 வருமானப் பரிசோதகர்கள் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கான 2 ஆய்வுகூட உதவியாளர்கள் என மொத்தமாக 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் முன்னதாக 14 வருமானப் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களில் 10 பேர் தமது உயர் கல்வித் தகைமைகளுக்கேற்ப வேறு வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்றுவிட்டமையால் குறித்த வெற்றிடங்கள் மீள நிரப்பப்படுவதாகக் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், புதிய வருமானப் பரிசோதகர்களின் சேவை மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து புதிய நியமனதாரர்கள் மத்தியில் உரையாற்றிய கௌரவ ஆளுநர், ‘எந்தவொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. நீங்கள் உங்களின் திறமைகளால் இந்தப் பதவியை அலங்கரிப்பதுடன், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அதியுயர் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்,’ எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்தும் அரச அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்துக் குறிப்பிட்ட ஆளுநர், ‘அண்மைக் காலமாக அரச அதிகாரிகளிடத்தில் ‘எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் எவ்விதப் பிரச்சினைகளும் வராது, அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்’ என்றவொரு தவறான எண்ணம் உருவாகி வருகின்றது. புதிய அதிகாரிகளான நீங்கள் ஒருபோதும் அவ்வாறு சிந்திக்கக் கூடாது. நீங்கள் நேர்மையாகச் சேவை செய்யும்போது, ஊழல் செய்பவர்களுக்கும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களுக்கும் அது கட்டாயம் பிடிக்காது. தமது அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காக அவர்கள் உங்களை விமர்சிக்கவே செய்வார்கள். அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது, உங்களின் கடமையை மக்களுக்காக நேர்மையாகவும் துணிவுடனும் முன்னெடுக்க வேண்டும், என ஆணித்தரமாக அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும், புதிய நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.