விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்

விவசாய இரசாயன விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் 13.05.2026 ஆம் திகதி யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் மற்றும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் யாழ் மாவட்டத்தில் காணப்படும் விவசாய இரசாயன விற்பனை நிலையங்களின் தற்போதைய நிலை குறித்தும் விவசாய உற்பத்தியில் விவசாய விற்பனை நிலையங்களின் பங்களிப்பு குறித்தும் விபரித்ததுடன் விவசாயிகளுக்கு பொருத்தமான தரமான சேவைகளை வழங்குவதன் ஊடாக உற்பத்தியின் தரத்தினை மேம்படுத்துவதுடன் சூழல் மாசடைதலையும் குறைத்து நுகர்வோரையும் பாதுகாத்து கொள்ள முடியும் எனத்தெரிவித்தார்.

மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் உரையாற்றுகையில் விவசாய-இரசாயன விற்பனையாளர்கள் உணவு உற்பத்தியில் முக்கியமான பங்களிப்பு உள்ளவர்களாகவும் சேவை வழங்குனர்களாகவும் காணப்படுகின்றனர். விற்பனையாளர்கள் பொறுப்புக்களுடன் கூடிய சேவையினை வழங்குவதன் மூலம் உணவு உற்பத்தியின் முக்கிய பங்காளர்களாக இருக்கின்றார்கள். இருப்பினும் சேவைகளை வழங்கி மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் தேவைகள் இனங்காணப்பட்டுள்ளது. விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஆரம்பித்து நடாத்தும் போது தனியே இலாப நோக்கம் அல்லாது திணைக்களத்தினால் சிபார்சு செய்யப்பட்டஇ பீடைகொல்லிகள் பதிவாளரினால் அனுமதியளிக்கப்பட்ட விவசாய இரசாயனங்களை உரிய அறிவுறுத்தல்களுக்கமைய விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் பாதுகாப்பான விவசாயத்தினை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்படல் வேண்டும் எனத்தெரிவித்தார்.

விவசாய இரசாயன விற்பனை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டுவதற்கான ஆரம்ப கட்ட நிகழ்வாகவே இன்றைய நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனத்தெரிவித்ததுடன் இந்நிகழ்விற்கு வருகை தந்த விற்பனையாளர்களிற்கு பராட்டினை தெரிவித்த மாகாண விவசாயப்பணிப்பாளர் அவர்கள் எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்த ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் கோரினார்.

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கு இரசாயன பீடைகொல்லி விற்பனை நிலையங்களின் பதிவு நடைமுறைகள்இ இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்கள் ஒழுங்குவிதிகள் தொடர்பாகவும் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரின் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பாகவும் யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் கருத்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து புதிதாக பீடை கொல்லி விற்பனை நிலையங்களை ஆரம்பித்தல் மற்றும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பீடை கொல்லி விற்பனை நிலையங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள், கருத்திற்கொள்ள வேண்டிய பிரமாணங்கள் குறித்தும் அவ்வாறு பேணத்தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து பாடவிதான உத்தியோகத்தர் திருமதி.கு.சுதாஜினி அவர்கள் விளக்கவுரை ஆற்றினார். அடுத்து பீடை கொல்லி விற்பனை நிலையங்களினை பதிவு செய்தல் வருடாந்த விற்பனைச்சான்றிதழ் பெறல் மற்றும் விற்பனைச்சான்றிதழினை புதிப்பித்தல் தொடர்பாக பாடவிதான உத்தியோகத்தர் (பயிர்ப்பாதுகாப்பு) திரு.ச.லக்சுமிதரன் அவர்கள் விளக்கினார். இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வில் பங்குபற்றிய பீடை கொல்லி விற்பனையாளர்களின்; சந்தேகங்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன.

மேலும்; இந்நிகழ்விற்கு யாழ் மாவட்டத்தில் இயங்கும் விவசாய இரசாயன விற்பனை நிலைய உரிமையாளர்கள் 47 பேர் பங்குபற்றியிருந்ததுடன் விவசாயப்போதனாசிரியர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.