விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களமும் வடக்கின் பாரம்பரிய உணவகமும் இணைந்து உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் 07.05.2026 வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன், தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், திரு.ச.சிவசிறிஇ சிறப்பு விருந்தினராக மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், வங்கி முகாமையாளர்கள் மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஆசிரியர்கள், மாணவர்கள் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கருத்து தெரிவிக்கையில்;, சிறிய நிலப்பரப்பிலேயே பல் வேறு வகையான பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இங்கு முழு நிலமும் பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் எமது நிலத்தினை பயன்படுத்தி பயிர்ச் செய்கை மேற்கொள்வதன் மூலம் எமது வீட்டிற்குரிய உணவுத் தேவையில் தன்னிறைவு அடையலாம் என கருத்துத் தெரிவித்தார்.

இவ்வயல் விழாவின் போது அம்மாச்சி பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களினால் பல வகையான பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தபட்டது. பொதி முறைப்பயிர்ச்செய்கையில் மரக்கறி பயிர்ச்செய்கை, பழப்பயிர்ச் செய்கை, வெங்காயச் செய்கை, உப உணவுப் பயிர்ச் செய்கை மற்றும் தேனீ வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் ட்ரோன் மூலமான இரசாயனம் தெளிக்கும் முறை செயன்முறை ரீதியாக காட்சிபடுத்தப்பட்டது. பயிர்ச் செய்கைத் தொடர்பாக பூரண விளக்கங்களும் அளிக்கப்பட்டது.