சமூகமட்ட அமைப்புகள் மூத்தோரின் முதிர்ந்த அறிவுரைகளுடன் இளையோர்களால் வழிநடத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் ஒழுக்கப் பிறழ்வுகள் மறைந்து அறநெறி தழைத்தோங்கும். இத்தகைய தன்னியக்கக் கண்காணிப்புப் பொறிமுறை எமது மாகாணத்தின் பல கிராமங்களில் நலிவடைந்து வருவது கவலையளிக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் 106ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சங்கத்தின் தலைவர் கி.கிருஸ்ணதாசன் தலைமையில் நேற்று (09.05.2026) சனிக்கிழமை மாலை சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
‘ஒரு கிராமத்தின் நீடித்த வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சனசமூக நிலையங்களைப் போன்ற அடிப்படைச் சமூக அமைப்புகளின் காத்திரமான பங்களிப்பு மிக அவசியமாகும். முன்னைய காலங்களில் இத்தகைய அமைப்புகளின் சீரிய செயற்பாடுகளால் சமூகத்தின் இளையோர் மத்தியில் ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட்டன.
ஞானபாஸ்கரோதய சங்கம் தனது 106ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது என்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இவ்வளவு நீண்டகாலம் ஒரு சமூக அமைப்பைச் சிதையாமல் நிலைநிறுத்தி, அதனை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது. இளையோரின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த புதிய அரங்கு உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்களை இச்சங்கம் முன்னெடுத்துள்ளமை, அதன் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்துக்குச் சான்றாகும்.
இன்று பல கிராமங்களில் சமூகமட்ட அமைப்புகள் பெயரளவில் மாத்திரம் இயங்குபவையாகச் சுருங்கியுள்ளன. இதன் நேரடி விளைவாகவே சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. சமூக அமைப்புகள் கட்டுக்கோப்புடன் இயங்கும்போது, அந்தச் சமூகத்தவர்களாலேயே சமூகம் கண்காணிக்கப்படும் ஒரு பாதுகாப்பு அரண் அங்கு உருவாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராமங்களில் இளைஞர்கள் தமது சமூக அமைப்புகளுடன் இணைந்து மதுப்பாவனையை முற்றாக ஒழித்து முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளே இன்றைய காலத்தின் தேவையாகும். தடம்மாறும் இளையோரை நல்வழிப்படுத்த எமது கைகளில் உள்ள இத்தகைய சமூக அமைப்புகளை மீண்டும் பலப்படுத்துவதே முதன்மையான தீர்வாகும்.
பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ஞானபாஸ்கரோதய சங்கம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவதுடன், அதனை இன்னும் வீரியமாக முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இச்சங்கம் தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்து கட்டுக்கோப்புடன் முன்னெடுத்துச் செல்ல எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன், என ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி தேவஸ்தானத்தின் பொ.வரதராஜக் குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்கினார். கௌரவ விருந்தினராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நளின் தர்சன அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திருமதி. பத்மஜா பாஸ்கரக்குருக்கள், கிராம அலுவலர் ப.தயாறூபன், ஞானபாஸ்கரோதய சங்க கனடா கலாசார ஒன்றியத்தின் உப தலைவர் ஜெகன் நடராஜா மற்றும் அதன் போஷகர் சி.பரம்சோதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவின் போது கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.







