வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமான காஞ்சிரமோட்டைக்கு ஆளுநர் கள விஜயம்

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமான காஞ்சிரமோட்டையில் கடந்த ஆண்டு மேற்கொண்ட களப் பயணத்தின்போது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டார். மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டியதுடன், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகளையும் ஆளுநர் வாழ்த்தினார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான காஞ்சிரமோட்டைக்கு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆளுநர் களப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக உரிய திணைக்களங்கள் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரைகளை வழங்கியிருந்தார்.

அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்து, மக்களின் ஏனைய தேவைகளைக் கேட்டறியும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்று (09.10.2026) வெள்ளிக்கிழமை காஞ்சிரமோட்டை கிராமத்துக்குக் களப் பயணத்தை மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடினர்.

மருதோடை – காட்டுப்பூவரசன்குளம் வீதியில் பாலம் அமைக்கும் பணி

கடந்த களப் பயணத்தின்போது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான மருதோடை – காட்டுப்பூவரசன்குளம் வீதியைப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தற்காலிகமாகப் புனரமைக்கும் பணி நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன், அதனை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், மாவட்டச் செயலகத்தின் நிதியுதவியில் பிரதேச சபை ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதியில் பாலம் அமைக்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை ஆளுநர் நேரில் பார்வையிட்டதுடன், ஒப்பந்தக்காரருடனும் கலந்துரையாடினார். தொடர் மழை ஆரம்பமாவதற்கு முன்னர் பால நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், பணிகளைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பணிகளை நிறைவுசெய்யும் வரை மேற்கொள்ளக்கூடிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

கிணறுகள் அமைப்பு, யானை வேலி – மக்களின் கோரிக்கைகளுக்கு நடைமுறைத் தீர்வு

கடந்த ஆண்டு ஆளுநரின் களப் பயணத்தின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, விவசாயத் தேவைகளுக்கான மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவற்றின் ஊடாகப் பயனடையும் மக்களையும் சந்தித்து ஊக்குவித்தார். மேலும், மக்களின் வீடுகளுக்கு யானை வேலிகள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளமையையும் ஆளுநர் பார்வையிட்டார்.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களை முழுமைப்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதுடன், வீடற்ற குடும்பங்களுக்கும் வீட்டுத் திட்டங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஆளுநர் உறுதியளித்தார்.

அத்துடன், அப்பகுதி மக்களுக்குத் தேவையான சுகாதார சேவைகளை நடமாடும் சேவையாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

பெரிய மருதோடை குளத்தைப் புனரமைப்பதன் மூலம் 420 ஏக்கரில் நெற்செய்கை

கிராம மக்களுடனான கலந்துரையாடலின்போது காணிப் பிரச்சினைகள், குளங்களின் புனரமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன. குறிப்பாக, பெரிய மருதோடை குளத்தை மூன்று அடி உயர்த்திப் புனரமைப்பதன் மூலம் நெற்செய்கையை 420 ஏக்கர் வரையில் விரிவுபடுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள இக்குளத்தை மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்வாங்கி மேலதிக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய முடியும் என ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன், எருக்கலம் குளம் மற்றும் காஞ்சிரமோட்டைக் குளம் ஆகியவற்றைப் புனரமைத்தல், அவற்றுடன் தொடர்புடைய வாய்க்கால்களை அமைத்தல் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.

விவசாய மேம்பாட்டுக்கு வழங்கப்பட்ட உதவிகள் – முன்னேற்றத்தைப் பாராட்டிய ஆளுநர்

கடந்த ஆண்டு ஆளுநர் மேற்கொண்ட களப் பயணத்தைத் தொடர்ந்து, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தால் காஞ்சிரமோட்டை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

அன்னாசிப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல், பயறு, உழுந்து மற்றும் மரக்கறிப் பயிர்ச்செய்கைக்கான பயிற்சிகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குதல், தேவையான உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும், இன்டர்நஷனல் நீட்ஸ் லங்கா நிறுவனத்தின் ஊடாக 12 சுற்று யானை வேலிகளும் 12 குழாய்க் கிணறுகளும் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் ஊடாக இதுவரை மூன்று விவசாயக் கிணறுகளும் அமைத்து முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வுதவிகளைப் பயன்படுத்தி தமது விவசாயச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் மக்களின் உழைப்பையும் முயற்சியையும் ஆளுநர் பாராட்டினார். திணைக்களங்களால் வழங்கப்படும் உதவிகளைச் சரியான முறையில் பயன்படுத்தி, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மக்கள் செயற்பட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எல்லைக் கிராமங்களில் வாழும் மக்கள் இடம்பெயராது, தமது சொந்தப் பிரதேசங்களிலேயே வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நிலையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஆளுநர், அந்த நோக்கத்துடனேயே கடந்த ஆண்டும் இப்பகுதிக்கு வருகை தந்ததாகவும், தற்போது முன்னெடுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட மீண்டும் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆளுநரின் இந்தக் களப் பயணத்தில் வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.