முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை பிரதேச மக்கள் முன்வைத்த வீதிப் புனரமைப்பு, நீர்ப்பாசனம், குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்று (09.10.2026) வெள்ளிக்கிழமை ஒதியமலை பிரதேசத்துக்குக் களப் பயணம் மேற்கொண்டு, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
பனைநின்றான் பாலப் புனரமைப்பு முன்னேற்றம்
ஆளுநர் கடந்த தடவை மேற்கொண்ட களப் பயணத்தின்போது, மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான பனைநின்றான் கிராமத்துக்குரிய பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் 5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் ஆற்றுச்சருக்கையும், நிரல் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் சிறுபாலங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் சிறிய பாலமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுசுட்டான் – தட்டாமலை வீதியில் மூன்று பெட்டிவடிவ சிறுபாலங்கள்
ஒட்டுசுட்டான் – தட்டாமலை இணைப்பு வீதி மழைக்காலங்களில் சுமார் நான்கு மாதங்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பராமரிப்பு நிதியின் கீழ் 30 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மூன்று பெட்டிவடிவ சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வீதியைப் புனரமைத்தல் மற்றும் எஞ்சிய சிறுபாலங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்வதற்குத் தேவையான நிதி எதிர்காலத்தில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதனைப் பயன்படுத்தி பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நேரில் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, ஒதியமலை கிராம அலுவலர் பணிமனையில் கிராம மக்களைச் சந்தித்த ஆளுநரும் குழுவினரும், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது வீதிப் புனரமைப்பு, குளங்களைத் திருத்துதல், போக்குவரத்து வசதிகள், யானை வேலி அமைத்தல், குளங்களின் எல்லைகளை அடையாளப்படுத்துதல், குடிநீர்ப் பிரச்சினை, பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, நெல் உலர்த்தும் தளம் அமைத்தல், மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்கான ஆதரவு மற்றும் தொலைத்தொடர்புச் சேவையின் சீரின்மை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மக்களால் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்ற ஆளுநர், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
2016 முதல் பயன்படுத்தப்படாத ஆரம்ப சுகாதார நிலையத்தைப் புனரமைக்க நடவடிக்கை
ஒதியமலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 2016ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படாமல் காணப்படுவதை ஆளுநர் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்தார். குறித்த சுகாதார நிலையத்தைப் புனரமைத்து, அதன் ஊடாக பல்வேறு இணைந்த சுகாதார சேவைகளை முன்னெடுக்கலாம் என முன்வைக்கப்பட்ட ஆலோசனையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அத்துடன், அங்குள்ள விடுதியையும் புனரமைத்து உரிய முறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒதியமலை அ.த.க. பாடசாலைக்குச் சென்ற ஆளுநர், பாடசாலையின் தற்போதைய நிலைமை, கட்டடத் தேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
கொம்பனித்தெரு வீதியைப் புனரமைக்க நடவடிக்கை
தண்ணிமுறிப்பு நோக்கிச் செல்லும் கொம்பனித்தெரு வீதியின் மோசமான நிலைமையையும் ஆளுநர் நேரில் பார்வையிட்டார். இந்த வீதியைப் பயன்படுத்தும் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், மழைக்காலங்களில் வீதியில் வெள்ளநீர் மேவிப் பாய்வதால் போக்குவரத்துப் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த வீதியை முதற்கட்டமாகப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தற்காலிகமாகப் புனரமைப்பதுடன், பின்னர் நிரந்தரப் புனரமைப்புப் பணிகளைப் படிப்படியாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
உடங்கா வீதி, பெரியகுளம் மற்றும் கருலப்ப முறிப்புக் குளத்தின் வாய்க்கால் தொடர்பில் கவனம்
இதனைத் தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குச் சொந்தமான உடங்கா வீதியைப் பார்வையிட்ட ஆளுநர், குறித்த வீதியை அடுத்த ஆண்டு புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.
அப்பகுதி மக்களின் விவசாயத் தேவைகளுக்குப் பயனளிக்கக்கூடிய பெரியகுளத்தைப் புனரமைப்பதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த பகுதி வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுவதையும் ஆளுநர் கவனத்தில் கொண்டார்.
கருலப்ப முறிப்புக் குளத்திலிருந்து விவசாயத்துக்கான வாய்க்காலைத் துப்புரவு செய்வதற்கு வனவளத் திணைக்களம் அனுமதி மறுத்துள்ள நிலையில், அந்த வாய்க்காலையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். விவசாயப் பணிகளுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மாற்றுக் காணிகள் ஆய்வு
ஒதியமலைப் பிரதேசத்தில் டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கி வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளையும் ஆளுநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆளுநரின் இந்தக் களப் பயணத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், மாகாண மேலதிக விவசாயப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



