வடக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின்போது, வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதற்கமைவாக, வடக்கு மாகாணத்துக்குரிய புதிய சேவைப் பிரமாணக் குறிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான அவதானிப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், இது தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடன் உடனடியாக ஆராய்ந்து பொருத்தமான முடிவுகளை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மேலும், வரி உத்தியோகத்தர்கள் மற்றும் வரி மதிப்பீட்டாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பிலும், அவர்கள் தமது நாளாந்த கடமைகளின்போது எதிர்கொள்ளும் ஏனைய நிர்வாக ரீதியான சவால்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


