கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். – ஆளுநர் தெரிவித்தார்.

மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கும் அமைப்புகளாலேயே ஒரு சமூகத்தை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பொருளாதார நெருக்கடியான காலகட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கூட்டுறவுத்துறையே அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஏழாலை மேற்கின் மைந்தனும் கூட்டுறவாளனுமான அமரர் கந்தையா மகாதேவன் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் (24.06.2026) ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணயச் சங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

‘1970களின் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மூடிய நிலையில் இருந்தபோது, எமது வடபகுதியின் கூட்டுறவுத்துறையே மக்களின் பசியைப் போக்கி அவர்களை வாழ வைத்தது. குறிப்பாக, சங்கானை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்த அமரர் கந்தையா மகாதேவன் அவர்கள் அக்காலகட்டத்தில் ஆற்றிய பணி அளப்பரியது. நான் அரச சேவையில் மேலதிக மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் அவரது அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நேரில் கண்டுள்ளேன். மக்களுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன்களை வழங்குவதுடன், சங்கத்தின் லாபத்தை மக்களுக்கே மீளளிக்கும் சிறந்ததொரு முன்னுதாரணமான கூட்டுறவு முறையை அவர் உருவாக்கினார்.

கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் போதே, அந்த அமைப்பை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள். அமரர் மகாதேவன் போன்றவர்களின் சேவை வெறுமனே நினைவுகூரப்படுவதோடு நின்றுவிடாமல், இன்றைய இளைய தலைமுறையினரால் அது செயல்வடிவில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். கிராமங்களின் உண்மையான வளர்ச்சி என்பது அங்கு இயங்கும் இத்தகைய அடித்தள அமைப்புகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ‘எழுச்சியகம்’ அமைப்பின் தலைவர் செல்வக்கிரீசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.சந்திரசேகரம், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.