அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு அமைவாகவும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலில் மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நயினாதீவு கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம், தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் மற்றும் யாழ்-கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் இன்று (06.10.2021) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நிகழ்வை மாண்புமிகு பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இணையவழி மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக அலரி மாளிகையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு பிரதம அமைச்சர், கௌரவ நீர்ப்பாசனத்துறை அமைச்சர், கௌரவ கடற்தொழில் அமைச்சர் மற்றும் துறைசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருந்தனர்.
குறித்த நிகழ்வில் நாகதீப ரஜமகா விகாராதிபதி, சமயத்தலைவர்கள், கௌரவ நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர், வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், பிரதம அமைச்சரின் செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரான்ஸ் நாட்டின் தூதுவர்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதானிகள் மற்றும் வட மாகாண நீர்ப்பாசன அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள், ஆரம்பிக்கப்பட்டுள்ள சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டம் மூலம் யாழ்-கிளிநொச்சி மக்கள் சுத்தமான அத்துடன் பாதுகாப்பான குடிநீரை பெற முடியும் எனவும் 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்-கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டமானது அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கௌரவ நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோரின் முயற்சியின் பலனாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மூன்று லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுத்தமான குடிநீர் வழங்கல் திட்டத்திற்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களிற்குமான நிதி உதவியையும் சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் மேலும் பல பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தீவுப் பகுதியில் காணப்பட்ட மக்களின் நீர் பற்றாக் குறைக்கு முன்னுரிமை வழங்கி சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்திய நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் நன்றியை தெரிவித்ததுடன் இத்திட்டங்களானது வடக்கு மக்களுக்கு கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதம் எனவும் தெரிவித்தார்.