இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் ‘ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்’ (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை (15.01.2026) மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது.
ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிகழ்வில் வலுசக்தி கௌரவ அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி கௌரவ பிரதி அமைச்சர் முஹமது இலியாஸ் முஹமது அஹ்ரம் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், மன்னார் மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரன், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டமானது, நாட்டின் தேசிய மின்வழங்கலுக்குத் தூய எரிசக்தியைச் சேர்ப்பதோடு, சூழலுக்கு உகந்த மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.








