பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை (Corporate Social Responsibility – CSR) வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், ‘மாகாண சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமான வழிகளில் ஒன்றாகப் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியும் காணப்படுகின்றது. எனினும், இதுவரை ஒரு சில நிறுவனங்களிடமிருந்து மாத்திரமே இந்நிதி மாகாண சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, இதனை முறையாக ஒழுங்குபடுத்தி, எதிர்காலத்தில் இந்நிதியை வழங்கக்கூடிய அனைத்துப் பெரு நிறுவனங்களிடமிருந்தும் அதனைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,’ என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

ஏனைய மாகாண சபைகளில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகப் பின்பற்றப்படும் நடைமுறைகளைத் தீவிரமாக ஆராய்தல். அந்த நடைமுறைகளுக்கு அமைவாக வடக்கு மாகாண சபைக்கெனப் புதிய, முறையான ஒழுங்குவிதிகளை வரைதல். இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட பெரு நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் அழைத்துக் கலந்துரையாடி, அவர்களிடமிருந்து சமூகப் பொறுப்புணர்வு நிதியை மாகாண சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முறைப்படி பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

இந்த முக்கிய கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.