பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் பேருந்தில் பயணித்த பயணியொருவரிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் யாழ்ப்பாணப் பேருந்து நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர் குறித்த பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அதிகார சபையால் 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், மீண்டும் இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு எழுத்துமூலமான உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின்போது தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்படுவது தொடர்பிலோ அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு தலைவர் சூ.விமலேஸ்வரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை *071 9090900* என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.