எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம்

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது.

வட மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றின் கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் அண்மையில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

உள்ளூராட்சி மன்றங்களுக்கான அறிவுறுத்தல்கள்:

* வீதி விளக்குகள்:

உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டிலுள்ள வீதி விளக்குகளை அவசியமற்ற நேரங்களில் அணைத்து வைப்பதற்கும், தேவையுள்ள இடங்களில் மட்டும் உரிய நேரத்தில் ஒளிரவிடுவதையும் அணைப்பதையும் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களால் தங்களது பிரதேச எல்லைக்குட்பட்ட பொதுமக்களிற்கு இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தல்.

* விளம்பரப் பலகைகள்:

வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் மின்சாரத்தினால் இயங்கும் விளம்பரத் திரைகளை (Digital Advertising Screens) இரவு வேளைகளில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கான கட்டுப்பாடுகள்:

* குளிரூட்டிப் பயன்பாடு:

அனைத்து அரச அலுவலகங்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மாத்திரமே குளிரூட்டிகளைப் (Air Conditioners) பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

* மின்சாதனங்கள்:

அலுவலகங்களில் மின்சார விளக்குகள் மற்றும் மின் விசிறிகளைத் தேவையற்ற போது அணைத்து வைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மாதாந்த மின் கட்டணப் பட்டியலில் மின் அலகுகளைக் குறைப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

* எரிபொருள் சிக்கனம்:

அரச வாகனங்களுக்கான எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

கண்காணிப்பு நடவடிக்கைகள்:

இந்தச் சிக்கன நடவடிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு அலுவலகத்திலும் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எரிபொருள் மற்றும் வலுச்சக்தி நுகர்வைக் குறைப்பதன் மூலம் மாகாண ரீதியாகப் பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என இக்கூட்டத்தில் பிரதம செயலாளர் அவர்களால் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.