‘டித்வா’ பேரிடரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதி புனரமைப்புப் பணிகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்

கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரின்போது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. துரிதகதியில் இடம்பெற்று வரும் இந்தச் சீரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான விசேட குழுவினர் இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

‘டித்வா’ பேரிடரின் கோரத்தாண்டவத்தால், பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் ஒரு பகுதியில் காணப்பட்ட காபற் தட்டு முற்றாகப் பெயர்ந்து அருகிலிருந்த வயல்வெளிக்குள் தூக்கி வீசப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மிக மோசமாகச் சேதமடைந்திருந்த குறித்த வீதியானது, தற்போது வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையில் 7 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் வீதியின் தற்போதைய நிலைமை குறித்துக் களத்தில் நேரில் ஆராய்வதற்காக, கௌரவ ஆளுநருடன் இணைந்து கௌரவ பிரதி அமைச்சர், வவுனியா மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்டப் பொறியியலாளர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரும் இதில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.