சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் தரப்பு உட்பட அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் தெரிவிக்கலாம். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் எனவும், இத்துறையை மேம்படுத்துவதற்குத் தனியார் துறையினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறைப் பங்குதாரர்களுடன் இன்று புதன்கிழமை (11.03.2026) காலை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக எமக்குத் தற்போது ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி இங்கு வருகைதரவுள்ள சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளுக்கான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார். இது எமக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். இத்திட்டங்களை முன்னெடுப்பதில் அரச திணைக்களங்கள் ஆற்ற வேண்டிய வகிபாகத்தையும், தனியார் துறையினராகிய உங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் முழுமையாக உணர்ந்துள்ளோம்.

போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடான வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன. அதன் ஓடுபாதையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. அதேபோல, காங்கேசன்துறை துறைமுகமானது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வெகுவிரைவில் புனரமைக்கப்படவுள்ளது. எமது சுற்றுலாத்துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் காணப்படுகின்றது. தரைவழிப் போக்குவரத்துக்கு 8 தொடக்கம் 9 மணித்தியாலங்கள் வரை தேவைப்படுகின்றன. அண்மையில் இங்கு வருகை தந்த சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் அமைச்சர், இச்சவாலுக்குத் தீர்வாகக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் சேவைகளை இயக்குவதற்கான பிரத்தியேக முனையமொன்றை எதிர்காலத்தில் அமைக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தக்கூடிய புதிய திட்டங்களை நீங்கள் அடையாளங்கண்டு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றை விரைவாக முன்னெடுப்பதற்கு எமக்கு வசதியாக இருக்கும். சில திட்டங்களை முன்னெடுப்பதில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதிகளைப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அறிய முடிகின்றது. எனினும், அந்தப் பிரச்சினைகளை நாம் வெகுவிரைவில் தீர்த்து வைப்போம். இது தொடர்பில் உங்களுடைய ஆலோசனைகளையும் நீங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். மேலும், தற்போது இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாவிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றனர். அதனைக் கருத்திற்கொண்டு ‘இராமாயண வழித்தடம்’ தொடர்பான சில வேலைத்திட்டங்களையும் நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் தரப்பு உட்பட அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் தெரிவிக்கலாம். தற்போதுள்ள குறைபாடுகளை நாம் ஒன்றிணைந்து படிப்படியாகத் தீர்த்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம்,’ என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இவ்விசேட நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் கே.சிவகரன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் வர்த்தக மற்றும் தூதரக நிர்வாக அதிகாரி ரம்யா சந்திரசேகரன், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.