சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.03.2026) காலை நடைபெற்றது.

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர அவர்கள் விசேடமாகப் பங்கேற்ற இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், எமது வடக்கு மாகாணத்தின் வளங்கள் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியை அடைவதற்கும் சகல திணைக்களங்களும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனக் குறிப்பிட்ட அவர், விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண விவசாய உற்பத்திகளைப் பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றி ஏற்றுமதி செய்யும் செயன்முறைகளை பெருமளவு ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திறந்த கலந்துரையாடலில், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. இதன்போது, அறிவியல் நகரில் அமைந்துள்ள வணிகக் காப்பகத்தை எதிர்வரும் இரண்டு மாத காலத்துக்குள் முழுமையாக இயங்கச் செய்து தொழில் முயற்சியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காகத் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக மேலதிக உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகக் கற்றல் மையம் மற்றும் தொழில் திணைக்களம் ஆகியன இணைந்து புதிய வணிக யோசனைகளை ஊக்குவிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

உணவு மற்றும் ஏனைய உற்பத்திகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தரப் பரிசோதனை நிலையங்களின் அவசியம் குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டு வரும் பரிசோதனை நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை மற்றும் பனை அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆய்வுகூடங்களை ஒருங்கிணைத்து, குறைந்த செலவில் தொழில்முயற்சியாளர்களுக்கு அச்சேவைகளை வழங்குவதற்கும், இதற்கான பிரத்தியேக தரவு மையமொன்றை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான கடன்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சவால்கள் குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் இவ்வாறான கடன்கள் உரிய முறையில் தேவையுடையோரைச் சென்றடையவில்லை என்ற விடயம் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய வணிக வங்கிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை உடனடியாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தொழில்முயற்சியாளர்களுக்கான வணிக ஆலோசனைகளை வழங்குவதற்கு, மாகாணத்திலுள்ள தற்போதைய வளங்களை ஒருங்கிணைத்து, வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தனியார் சேவை வழங்குநர் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடாதிபதிகள், சிரேஷ;ட விரிவுரையாளரும் ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், வர்த்தக தொழிற்றுறை மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.