சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு கொள்வனவுச் செயன்முறைகள் ஆண்டிறுதி வரை இழுத்தடிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டும் அவ்வாறான தாமதங்கள் ஏற்படாதவாறு, உரிய காலவரையறைக்குள் திட்டங்களுக்கான கொள்வனவுப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. திணைக்களத்தின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகளை உரிய நியாயப்படுத்தல்களுடன் நிதி ஆணைக்குழுவுக்கு முன்வைக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்காலத்தில் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு துணைத் திணைக்களங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தனித்தனியான வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் கோரப்பட வேண்டும் எனவும் ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், சுகாதாரத் திணைக்களத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ள ஏனைய நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம் மற்றும் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்றிட்ட முன்னேற்றங்களும் கூட்டத்தில் தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டன.

இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி மற்றும் பொறியியல்), மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர், மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.