சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் – கௌரவ ஆளுநர் உரை

எந்தவொரு உற்பத்தியாளரினதும் உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனவும், இடைத்தரகர்கள் உழைத்துச் செல்வதற்கு இடமளிக்காமல் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்போதே எமது மாகாணம் முழுமையாகத் தன்னிறைவடைய முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

‘வடக்கிற்கான தொழில்துறைகள் மன்றத்தின்’ வருடாந்தப் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (21.03.2026) மாலை, மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், தொழில்துறைகளின் நிலையான அபிவிருத்தியின்றி எமது மாகாணம் வளர்ச்சியடைய முடியாது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி என்பது ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. இதற்கு அரச திணைக்களத் தலைவர்களின் எண்ணங்களில் இன்னமும் மாற்றங்கள் வரவேண்டியிருக்கின்றது. ஆரம்பத்தைக் காட்டிலும் தற்போது சில மாற்றங்கள் காணப்பட்டாலும், இன்னமும் காத்திரமான மாற்றங்களை நான் எதிர்பார்க்கின்றேன்,’ எனத் தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ‘போர் நிறைவடைந்த கடந்த 16 ஆண்டுகளில் எமது மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. ஆனால், அரசாங்கம் வழங்கும் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் இன்னமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அரசாங்கம் அறிவிக்கும் வட்டிக் குறைந்த கடன் திட்டங்கள் நாடு முழுவதுக்குமானவையாகவும், ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ (First come, first served) என்ற அடிப்படையிலுமே வழங்கப்படுகின்றன. எமது தொழில்முயற்சியாளர்கள் வங்கிகள் கோரும் ஆவணங்களைத் தயார்செய்வதற்குள் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் அக்கடன்களைப் பெற்றுக்கொள்கின்றனர். இதற்குத் தீர்வாக நாம் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றோம். முதலாவதாக, வடக்கு மாகாணத்திற்கெனத் தனியானதொரு கடன் தொகையை ஒதுக்குமாறு கோரவுள்ளோம். இரண்டாவதாக, எமது தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்கு இங்குள்ள பல்கலைக்கழகங்களின் ஊடாக உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளோம்,’ என்றார்.

சுற்றுலாத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்துத் தெரிவித்த ஆளுநர், ‘எமது மாகாணத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்துக்குச் சுற்றுலாவிகள் மிகவும் முக்கியமானவர்கள். வடக்கு மாகாணத்துக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாவிகள் வருகின்றனர். அதனை மேலும் அதிகரிப்பதற்காக இந்தியத் துணைத் தூதரகத்தின் முழுமையான ஆதரவுடன் சில முன்னெடுப்புகளைச் செய்கின்றோம். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பயண நேரம் சுற்றுலாவிகளின் வருகையில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றது. இதற்குத் தீர்வாக, தற்போதைய அரசாங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ளூர் பயண முனையமொன்றை ஆரம்பிப்பது குறித்துக் கவனம் செலுத்தியுள்ளது. அதேபோல, திருகோணமலைக்கு வரும் சுற்றுலாவிகள் வடக்கை நோக்கி இலகுவாகப் பயணிப்பதற்கு வசதியாக, கொக்கிளாய் – புல்மோட்டைப் பாலம் அமைக்கும் திட்டத்துக்காக, சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், வடக்கு மாகாணத்துக்கு வரும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை தொடர்புடைய அனைத்து அரச திணைக்களங்களும் ஒன்றிணைந்து ஒரே கூரையின் கீழ் (Single Window System) வழங்குவதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். இது நடைமுறைக்கு வரும்போது முதலீட்டாளர்களுக்கு அது பெரும் வாய்ப்பாக அமையும்,’ எனவும் ஆளுநர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் வர்த்தக மற்றும் தூதரக நிர்வாகத் தலைவர் ரம்யா சந்திரசேகரன், அரச திணைக்களங்களின் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வடக்குக்கான தொழில்துறைகள் மன்றத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.