கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள குறித்த வலையமைப்பின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், அந்த அமைப்பின் கீழ் இயங்கி வரும் 5 வௌ;வேறு இல்லங்களுக்கும் நேரில் பயணம் செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்களைச் சந்தித்து அவர்களின் நலன்களைக் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது, குறித்த அமைப்பின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அங்குள்ள வசதிகள் தொடர்பில் நிர்வாகிகளுடன் ஆளுநர் விரிவாகக் கலந்துரையாடினார். அத்துடன், தற்போதைய சூழலில் குறித்த வலையமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள், நாளாந்தப் பராமரிப்புச் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகள் குறித்தும் ஆளுநரின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
அமைப்பின் நிலைமைகளை நேரில் கேட்டறிந்த ஆளுநர், குறித்த வலையமைப்பின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்குத் தேவையான சாத்தியமான உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்துக் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
ஆளுநரின் இந்த விசேட களப் பயணத்தின்போது, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.






