‘சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கிய சமூகங்களை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் மாகாண மட்ட மாற்றுவலுவுடையோர் தினவிழா 12.12.2025ஆம் திகதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சரஸ்வதி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்ஷhந்தன் தலைமையில் ஆரம்பமாகியது.
சிறப்பு விருந்தினர்களாக பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.முத்துலிங்கம் நந்தகோபாலன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக சட்டப்பீட சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. கோசலை மதன் மற்றும் வாழ்வக நிறுவனத்தின் தலைவர் திரு.ஆறுமுகம் ரவீந்திரன் மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர் திரு.கனகசபாபதி கனகேஸ்வரன் ஆகியோரும், திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வெளிக்கொண்டுவருமுகமாக போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடசாலை, இல்லம் மற்றும் சங்கங்கள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டு வெற்றிபெற்ற சங்கங்கள் தெரிவுசெய்யப்பட்டது. அவர்களை கொளரவிப்பதற்காகவும் இவ் அசாதாரண சூழ்நிலையின் மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கும் இவ்வாறான விழாக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உகந்ததாக அமையும் எனும் அடிப்படையில் இவ்விழாகொண்டாடப்பட்டது. மாற்றுவலுவுடையோர்கள் தங்களுக்கான தினத்திலே கலைநிகழ்வுகளை மிகவும் சிறப்பாக நடாத்தி திறமைகளை வெளிக்காட்டுகின்றனர்.
மாகாண மட்டத்திலே சிறப்பாக செயற்படும் மாற்றுத்திறனாளிகளை கௌரவித்து ஊக்கப்படுத்துமுகமாக பல்வேறுவகையில் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை மற்றும் பிரதேச செயலகங்களூடாக கோரப்பட்டு கிராம அலுவலர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை இணைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் துறைசார்ந்த அரச அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக ஐவர் உள்ளடங்கிய மாகாண மட்ட மதிப்பீட்டு குழு ஒன்றினூடாக மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் வெற்றியீட்டிவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
மாற்றுவலுவுடையோருக்காக இயங்கி வருகின்ற பாடசாலைகள், மாற்றுவலுவுடையோர் இல்லங்கள், சிறந்த மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட மாற்றுவலுவுடையோர் சங்கங்களுக்கு துறைசார் மாகாண மட்ட அரச அதிகாரிகள் மற்றும் மத்திய அரச அலுவலர்களான சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய ஐந்து உத்தியோகத்தர்களை கொண்ட மாகாண சமூக சேவைகள் பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட மாகாண மட்ட மதிப்பீட்டுக் குழு நேரடியாக விஜயங்களை மேற்கொண்டு மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் வெற்றியீட்டியவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.










