கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (01.08.2026) நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தினூடாக 406 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் உரிய காலப்பகுதிக்குள் தமக்கான ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, ஆளுநருடனான பொதுமக்கள் சந்திப்புத் தினங்களில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இம்முறைப்பாடுகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் அவர்கள் தீர்க்கமாக ஆராய்ந்தபோது, ஆசிரியர்கள் ஓய்வுக்கு விண்ணப்பித்த பின்னரே அவர்களது தனிப்பட்ட சுயவிவரக் கோவைகளில் உள்ள ஆவணக் குறைபாடுகள் கண்டறியப்படுவதால் ஓய்வூதியம் காலதாமதமடைவதும், சிலரது ஓய்வூதியம் விசாரணைகள் முடிவுறாமையால் வழங்கப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.

அத்துடன், விசாரணை முடிவடையாமையால் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாதவர்களின் விவரங்களும் கௌரவ ஆளுநரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான விசேட செயற்றிட்டங்களும் ஆளுநரால் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆவணக் குறைபாடுகளால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தமது சேவைக் காலத்திலேயே சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்துவது அவசியம் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக, முதற்கட்டமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு ஆளுநரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடமாடும் சேவை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக கடந்த 18.07.2026 அன்று யாழ்ப்பாணம், வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, முல்லைத்தீவு, கிளிநொச்சி வடக்கு மற்றும் கிளிநொச்சி தெற்கு ஆகிய கல்வி வலயங்களில் நடமாடும் சேவை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று (01.08.2026) எஞ்சிய கல்வி வலயங்களான தீவகம், மடு, மன்னார், துணுக்காய், வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு ஆகிய வலயங்களிலும் இந்நடமாடும் சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்விரண்டு நடமாடும் சேவைகளிலும் பெருமளவான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமது சுயவிவரக் கோவைகளைச் சீர்செய்து கொண்டனர். இத்திட்டம் தமக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாகப் பயன்பெற்ற ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதேவேளை, இவ்வாண்டு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தின் பின்னூட்டங்கள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் ஆண்டிலும் இத்திட்டத்தை மேலும் மேம்படுத்திச் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கௌரவ ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.