வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா இன்று (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முனவ்பர் அவர்களின் பிரதம பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கட்டுமானக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் (யாழ்  கிளிநொச்சி கிளை) தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் (காஸிமி) அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமானது. பள்ளிவாசல் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து, மண்கும்பான் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அ.அன்ரன் ஜேசுதாசன் அவர்கள் கிராம மட்டத் தமிழ் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றினார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜெ.றஜீவன் மற்றும் கௌரவ க.இளங்குமரன், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.பைசல், வேலனை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ சிவலிங்கம் அசோக்குமார், வேலனை பிரதேச செயலாளர் த.அகிலன் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கட்டுமானக் குழுவினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, பள்ளிவாசல் மீள் கட்டுமானத்துக்கான அடிக்கல் நடும் பிரதான நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் லுஹர் தொழுகை இடம்பெற்றது.