உள்ளூராட்சி அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது

மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.03.2026) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க.இளங்குமரன் அவர்களும் கலந்துகொண்டார்.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றின் தற்போதைய தேவைப்பாடுகள் தொடர்பில் விரிவான கருத்துகளை முன்வைக்குமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, மாகாணத்தில் நிலவும் தொழில்நுட்ப ரீதியான ஆளணி வெற்றிடங்கள் பெரும் சவாலாக உள்ளமை குறித்து அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த காலங்களை விட தற்போது பல மடங்கு நிதியொதுக்கீடுகள் வடக்கு மாகாணத்துக்குக் கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அந்த நிதியைச் சரிவரக் கையாள்வதற்கும், அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனாக முன்னெடுத்து முடிப்பதற்கும் போதிய தொழில்நுட்ப ஆளணியினரின் அவசியம் குறித்து இங்கு பலமாக வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், உள்ளூராட்சித் திணைக்களத்தின் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்தின் காணி தொடர்பான தேவைப்பாடுகள் முற்றிலும் வித்தியாசமானவை என்பதை நியாயபூர்வமாக எடுத்துரைத்த அதிகாரிகள், அதற்கான வளங்களை ஏற்படுத்தித் தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சுச் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட இக்கருத்துகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க.இளங்குமரன் அவர்கள், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் துறைசார் அமைச்சு ரீதியான ஆலோசனைக் குழுக் கூட்டங்களின்போது உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகப் பதிலளித்தார்.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களம், கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சுற்றுலா அதிகார சபை ஆகியவற்றின் பணிப்பாளர்கள், காணி ஆணையாளர் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.