இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.03.2026) மாலை நடைபெற்றது.
கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆளுநருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆராயப்பட்ட விடயங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் போக்குவரத்துப் படிகள், இடமாற்றங்கள், மற்றும் மாகாணத்தில் எந்திரவியல் பொருட்கள் ஆய்வுகூடங்களை அதிகரித்தல், ‘தொழில்நுட்பக் கணக்காய்வு’ முறைமையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் ஊடாகப் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவற்றின் தரம் மற்றும் கணிய அளவுகளை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் சங்கப் பிரதிநிதிகளால் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், சில முக்கிய விடயங்களில் தமது சங்கத்தின் நிலைப்பாடுகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட தொழில்வாண்மை ரீதியான கோரிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் அவர்களால் சில முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் பரிந்துரைகளைத் துரிதமாக ஆராய்ந்து, அதற்கான அறிக்கையை விரைவாகத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.




