பொதுமக்களின் முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 14 உணவகங்களுக்கு சாவகச்சேரி பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (16) திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டனர்.
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்களில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது சட்டத்திற்கமைவாக உணவகங்கள் இயங்குகின்றனவா என்பதுடன் உணவகங்களின் தரம் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது 11 உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் உணவுகள் தயாரிக்கும் பகுதிகள் மிகவும் சுத்தமற்று காணப்பட்டன. இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 04 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் 2 உணவங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன் , ஏனைய உணவகங்களை மிகவும் தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் சாவகச்சேரி பொதுசுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டது. குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதார அதிகாரிகளினால் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஒரு உணவு மருந்து பரிசோதகருடன் ஆறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.