கிளிநொச்சி மாவட்டத்திற்கான வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களின் கள விஜயமும் கல்விச் சுற்றுலாவும்

வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலிற்கமைய வடமாகாண ஆளுநர் செயலக அலுவலர்கள் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, வட்டக்கச்சி, இரணைமடு போன்ற பிரதேசங்களுக்கு 20.07.2019 ஆம் திகதி களவிஜயமும் கல்விச் சுற்றுலாவினையும் மேற்கொண்டிருந்தார்கள். இக் களவிஜயத்தில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலளர், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள், ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உதவி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் என 47 பேர் வரையில் பங்குபற்றியிருந்தனர்.

இக் களவிஜயத்தின் போது பூநகரி, இராமநாதபுரம் மற்றும் திருவையாறு ஆகிய விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பங்குபற்றுநர்களிற்கு காண்பிக்கப்பட்டு விவசாய தொழில்நுட்பத் தகவல்களும் வழங்கப்பட்டன.

பூநகரி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற்புலவு கிராமத்தில் ONUR திட்டப் பயனாளியான பாலச்சந்திரன் இரத்தினசிங்கம் என்பவரின் விவசாயக் கிணறு மற்றும் வர்த்தக ரீதியிலான வீட்டுத் தோட்டத்தில் தூவல் நீர்ப்பாசனத்தொகுதியுடன் நிலக்கடலைச் செய்கை என்பன அப் பிரிவு விவசாயப் போதனாசிரியரினால் காண்பிக்கப்பட்டு விவசாயம் சார் தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இராமநாதபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வட்டக்கச்சி 5 வீட்டுத் திட்டம் கிராமத்தில் PSDG திட்டப் பயனாளியான ம.சுதேசகுமாரன் என்பவரின் TOM E JC செறிவான மாமாரச்செய்கை காண்பிக்கப்பட்டு உயர் அடர்த்தி முறையிலான மாமரநடுகை முறைமை, கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் செயற்பாடு. பழ உற்பத்திக்கு விடப்படும் காலம், பழங்களின் தரத்தைப் பேணும் முறைமை, பழங்களிற்கு உறையிடும் காலம் மற்றும் நோக்கம் என்பன தொடர்பாகவும், உயர் அடர்த்தி முறமையிலான மாமரச் செய்கையின் நன்மை, மேலதிக வருமானம் மற்றும் இதன் கீழான ஊடுபயிர்ச்செய்கை என்பன தொடர்பாக அப் பிரிவு விவசாயப் போதனாசிரியரினால் காண்பிக்கப்பட்டு விவசாயம் சார் தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன. விவசாயி தனது அனுபவம் தொடர்பாகவும் பங்குபற்றுநர்களிற்கு எடுத்துக் கூறினார்.

விவசாயப் போதனாசிரியரினதும் விவசாயியினதும் விளக்கங்களை ஆர்வமாவும் விருப்புடனும் பங்குபற்றுநர்கள் செவிமடுத்தார்கள். இதன்போது ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மாமரச் செய்கை மிகவும் நேர்த்தியாக செய்கை பண்ணப்பட்டிருப்பதற்கு நன்றி கூறினார். குறித்த மாமரத் தோட்டத்தில் ஒர் வீடியோ ஆவணத்தொகுப்பை மேற்கொள்ள தனது உத்தியோகத்தருக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் எமது பிரதேசத்தில் இவ்வாறான விவசாயிகளின் செய்கையை ஏனைய விவசாயிகளுக்கும் தெரிவிப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்பாடடையச் செய்யலாம் எனவும் கூறினார்.

திருவையாறு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் PSDG திட்டப் பயனாளியான சி.சந்திரேஸ்வரன் என்பவரின் சூரியசக்தியில் இயங்கும் நீரிறைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்டிருக்கும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பார்வையிடப்பட்டன. இதன்போது சூரியசக்தியில் இயங்கும் நீரிறைக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்துவதன் ஊடாக பயிர்உற்பத்திச் செலவீனக் குறைப்பு, பயிர்செய்யக் கூடிய விஸ்தீரணம், நீரிறைக்கும் இயந்திரத்தின் இயக்க முறமைகள், பாகங்களும் அவற்றின் தொழிற்பாடுகளும் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் இயக்க முறமைகள் செய்முறை ரீதியாக செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டன.