எமது உறவுகள் புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குச் சென்றாலும் தாயகத்தின் தேவைகளை அறிந்து சேவையாற்றுவது மிகவும் போற்றுதலுக்குரியது

எமது வாழ்க்கை முறை மாறி, கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக மாறியுள்ள தற்போதைய காலகட்டத்தில் முதியோர்களைப் பராமரிப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது எனவும், இவ்வாறான சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குச் சென்றாலும் தாயகத்தின் தேவைகளை அறிந்து சேவையாற்றுவது மிகவும் போற்றுதலுக்குரியது எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

சாவகச்சேரி, சரசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘கம்ஃபர்ட் கெயார் ஹோம்’ (Comfort Care Home) எனப் பெயரிடப்பட்டுள்ள வலிதணிப்புப் பராமரிப்பு இல்லத்தின் (Palliative Care Home) திறப்பு விழா இன்று (24.10.2026) சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இவ்வாறான ஏற்பாடுகளை உருவாக்கிச் செயல்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். தாயகத்தின் தேவையறிந்து இந்த நற்பணியைச் செய்து வரும் கொடையாளர்களுக்கு மாகாணத்தின் சார்பாக எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்குள்ள மக்களின் தேவைகளை அங்கிருந்து அறிந்து இவ்வாறான உதவிகளைச் செய்வது மிக முக்கியமான பணியாகும். சமூகத்தின் நன்மை கருதி கொடையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் தொடர்ந்து செய்து வரும் இந்த உன்னதமான பணி மேலும் சிறக்க வேண்டும்” என வாழ்த்தினார்.

இதன்போது உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ,
இன்று சாவகச்சேரி, சரசாலையில் உங்களுடன் இணைந்து நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன். எமது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, இன்று இந்த நோய்த்தணிப்புப் பராமரிப்பு இல்லத்தின் (Comfort Care Home Hospice) கதவுகளைத் திறக்கிறோம். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் என்ற முறையில், இன்று நாம் மருத்துவத்தைப் பற்றி மட்டும் பேசாமல், மனிதநேயத்தைப் பற்றியும் பேசுகிறோம். புற்றுநோய் அல்லது இறுதிநிலை உறுப்பு செயலிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்படும்போது மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது; அந்தச் சமயங்களில் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளிப்பதே எமது தலையாய கடமையாகிறது. வெளிநாடுகளில் வசித்தாலும் தாயகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள நீங்கள் அனைவரும் உண்மையான இலங்கையர்கள் என்பதை நிரூபித்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த இல்லம் சாதாரண முதியோர் இல்லம் அல்ல எனவும், மாறாக உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு (Life-limiting diagnosis), மேலதிக சிகிச்சைகளின்றி ஆறுதல் தரும் பராமரிப்பை (Comfort Care) மாத்திரம் எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான விசேட பராமரிப்பு நிலையமாகும். இதற்கான அனுமதி, சம்பந்தப்பட்ட மருத்துவருடைய பரிந்துரையுடன், இல்லத்தின் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் ஊடாகத் தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும் என இல்லத்தின் நிறுவுனர்கள் விளக்கமளித்தார்.

இரண்டு மாதங்களுக்கும் குறைவான ஆயுட்காலம் என மருத்துவக் குழுவால் தெரிவிக்கப்பட்ட, உணவு உட்கொள்ளச் சிரமப்படும் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நோயாளர்களுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்த இல்லத்தில் நோயாளிகளுக்காக 20 தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வலி நிவாரணம், ஒட்சிசன் சிகிச்சை, முழு நேர தாதியர் பராமரிப்பு மற்றும் மன அமைதிக்கான ஆன்மீகத் தோட்டம் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நோயாளிகளின் குடும்பங்களின் சுமையும், அரசு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் (ICU) சுமையும் பெருமளவு குறைக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன, யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி ஆறு. திருமுருகன், குறித்த பராமரிப்பு இல்லத்தின் ஸ்தாபகர் மருத்துவர் கே.தேவகாந்தன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், கொடையாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.