பயிர்மாற்றீட்டுத் திட்டத்தில் நிலக்கடலை பயிர்ச்செய்கை வயல்விழா – குமரபுரம்

கிளிநொச்சி மாவட்டத்தின் குமரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், 2026ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வயல் நிலங்களில் பயிர்மாற்றீட்டு திட்டத்தில் நிலக்கடலை செய்கை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் வயல்விழாவானது பூநகரி வீதி பரந்தன் பகுதியில் அ.மதன்குமார் என்பவரின் களத்தில் 09.10.2026 காலை 10.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர் திருமதி.நி.எழினி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள், கல்மடு நகர் மூலிகை பண்ணை வைத்திய அதிகாரி, விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர், மேலும் இந் நிகழ்வில் நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் பெறுமதி சேர் உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டது.

நிலக்கடலைப் பயிர்ச் செய்கையின் முன்னேற்றம், பயிர்ச்செய்கை தொடர்பான அனுபவப்பகிர்வு மற்றும் நவீன விவசாய நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வு அமைந்தது.

அத்துடன் விவசாயிகளின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாகாண விவசாயத் திணைக்களத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுடன் நோய்த்தாக்கம் பற்றியும் அதற்கான விளக்கங்களும் வழங்கப்பட்டன.