கடந்த காலங்களைப் போன்று அரசியல் தலையீடுகளோ அல்லது இலஞ்ச ஊழல்களோ இன்றி, திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் மாத்திரமே தற்போதைய அரசாங்கத்தால் அரச நியமனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 35 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16.10.2026) வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனங்கள் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவால் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில் கடமையைப் பொறுப்பேற்காதமையால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான நியமனங்களே இன்றைய தினம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றிய ஆளுநர், அரச சேவையாளர்கள் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். எவ்விதக் கண்காணிப்புகளும் இன்றி நீங்கள் உங்களது கடமைகளைச் சரிவரச் செய்வதுடன், சமூகத்தில் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ வேண்டும்’ என வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடந்த காலங்களில் அரச நியமனங்கள் அரசியல்வாதிகளின் பரிந்துரைக் கடிதங்கள் மூலமும், இலஞ்சத்துக்காகவும் வழங்கப்பட்டதால், நியமனம் பெற்றவர்களுக்கு எம்மால் உளப்பூர்வமாக வாழ்த்துகளைச் சொல்ல முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், இன்று எந்தவிதமான அரசியல் தலையீடுகளுமின்றியும், நேர்முகத் தேர்வின் ஊடாக உங்களுடைய தனிப்பட்ட திறமையின் அடிப்படையில் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் அரச நிறுவனங்கள் பொறுப்புக்கூறல் அற்ற இடங்களாக மாறியிருந்தன. எனினும், டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் இன்றைய காலகட்டத்தில், எவ்விதத் தலையீடுகளுமின்றித் தமது திறமையால் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள இளையோர்கள் அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துத் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி.ச.லதுமீரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.



