கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியின் பயன் மாணவர்களின் அடைவுமட்டத்தில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர்.

வடக்கு மாகாண சபையாலும் கல்விக்குப் பொறுப்பான தேசிய அமைச்சாலும் தேவையான அளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. அந்த நிதியின் உண்மையான பயன், மாணவர்களின் கல்வி அடைவுமட்டம் உயர்வதன் ஊடாகவே வெளிப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (15.10.2026) வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டுத் துறைகளின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஆசிரியர்களின் வெளிநாட்டு விடுமுறைக்கான விண்ணப்பக் கோவைகளைத் திணைக்களங்கள் உரிய காலத்தில் அனுப்பிவைப்பதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார். ஆசிரியர்களுக்கு நீண்டகால விடுமுறை வழங்குவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பதிலீட்டுக்கு ஏற்ற ஆசிரியர்களை ஏற்பாடு செய்வதுடன், அனுமதி பெறாமல் கடந்த காலங்களில் வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் தொடர்பில் உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் மொத்தம் 3,579 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1,613 திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்களின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், தேசிய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தையும் தனித்தனியாக ஆராய்ந்தார்.

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவான உணவுகளை வழங்குவது தொடர்பில், வலயக் கல்விப் பணிமனைகளுடன் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனைகள் கலந்துரையாடி வருவதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

விளையாட்டு மற்றும் பண்பாட்டுத் திணைக்களங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தபோது, மாகாணப் பண்பாட்டுப் பெருவிழாவைத் திட்டமிட்ட காலத்துக்குள் நடத்தி முடித்தமைக்காக ஆளுநர் பாராட்டுத் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான நிகழ்ச்சித் திட்ட நாட்காட்டியை முன்கூட்டியே தயாரித்து, உரிய காலத்தில் நிகழ்வுகளை நிறைவு செய்வதற்கான பொறிமுறையை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகளின் வளர்ச்சியும் மாணவர்களின் கல்வி முன்னேற்றமும் அதிபர்களின் தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பில் பெரிதும் தங்கியுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். சில அதிபர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படும் நிலையில், சமூக ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தால் சிலர் முனைப்புடன் செயற்படத் தயங்குவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும். அவர்களுடன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கலந்துரையாடி, பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து, கல்வி முன்னேற்றத்துக்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். இந்த நடைமுறையைச் சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், மேலதிகப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.