தர்மபுரம் பிரதேசத்தில் கம்பு சிறுதானிய அறுவடை விழா – வயல்விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், 2026ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுதானிய செய்கையை ஊக்குவித்தல் திட்டத்தில் கம்பு சிறுதானிய செய்கை வயல்விழாவானது விவசாயப்போதனாசிரியர் திருமதி.கி.சரண்யா தலைமையில் தர்மபுரம் கிழக்கு பகுதியில் 07.10.2026 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், தர்மபுரம் மத்திய கல்லூரி அதிபர், விவசாயப்போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர், மேலும் இந் நிகழ்வில் கம்பிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டது.
பாரம்பரிய விவசாய நடைமுறைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இவ் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. கம்பு போன்ற சிறுதானியப் பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதுடன், மக்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் மேம்படுத்த முடியும் என வலியுறுத்தப்பட்டது.

இவ் விழா விவசாயிகளிடையே சிறுதானியப் பயிர்ச் செய்கை தொடர்பான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. வயலில் விளைந்த பயிர்களின் அறுவடை நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், விவசாயிகளின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.