யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

‘எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் மிகவும் அவசியமானவையாகும். முதலீட்டாளர்கள் உரிய காலப்பகுதிக்குள் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஒரு திணைக்களம் அனுமதி வழங்கினாலும், மற்றுமொரு திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற தாமதமாவதால் முதலீட்டாளர்கள் விரக்தியடைகின்றனர். இது தொடர்பில் அனைத்துத் திணைக்களங்களும் விசேட கவனம் செலுத்துவதோடு, தேவைப்படின் நிபந்தனைகளுடனாவது அனுமதிகளை வழங்க முன்வர வேண்டும். அதேவேளை, முதலீட்டாளர்களும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கும் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (30.07.2026) இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் மேற்குறித்தவாறு தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் முதலாவதாக, வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டுள்ள விலேஜ் ஹோட்டல் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளரை நேரில் அழைத்து, அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் திட்டத்தை ஒழுங்குமுறைப்படுத்தப் பணிப்பதெனவும், அதற்கு அவர் ஒத்துழைக்காவிடின் உரிய திணைக்களங்கள் ஊடாகச் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. முதலீடுகளை நாம் வரவேற்கும் அதேவேளை, சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இதன்போது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவதாக, ஊர்காவற்றுறை – பருத்தியடைப்புப் பகுதியில் முன்னெடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘நலன்புரி நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தித் திட்டம்’ தொடர்பில் ஆராயப்பட்டது. இத்திட்டம் குறித்து, பிரதேச செயலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து, அப்பிரதேச மக்களைச் சந்தித்துத் திட்டத்தின் நன்மைகள் தொடர்பில் விளக்கமளித்துத் தெளிவுபடுத்திய பின்னர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டது.

மூன்றாவதாக, அரியாலையில் அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘யாழ்ப்பாண கரையோரக் கலாசார ஓய்விடத் திட்டம்’ குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அதனைப் பிரதேச செயலக நிலப்பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து, ஏனைய நடவடிக்கைகளைத் தொடர்வதென முடிவு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெ.றஜீவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ்ப்பாrcண மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பளர், நல்லூர், ஊர்காவற்றுறை, மருதங்கேணி மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வல்வெட்டித்துறை நகர சபையின் கௌரவ உப தவிசாளர், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பொறியியலாளர், தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர், வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.