போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போதே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
இக்கலந்துரையாடலின் போது, நடப்பு ஆண்டில் பனங்கள் ஏற்றுமதி இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவரால் சுட்டிக்காட்டப்பட்டது. அரச திணைக்களங்களின் சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் காலதாமதங்கள் காரணமாக ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்றுமதியைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், பல கூட்டுறவுச் சங்கங்கள் பெருமளவான பனங்கள்ளை நிலத்தில் ஊற்றி அழிக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், எமது மாகாணத்துக்கே உரித்தான பெறுமதிமிக்க வளம் இவ்வாறு வீணடிக்கப்படுவதாகவும் கவலை வெளியிடப்பட்டது.
நிலைமைகளைக் கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ‘பனங்கள் ஏற்றுமதியின் ஊடாக எமது மாகாணத்தின் பனை வளத் தொழிலாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும். அரச திணைக்களங்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்குத் தடையாக அன்றி, முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்’ என வலியுறுத்தினார். அத்துடன் திணைக்களங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை உடனடியாகப் பேசித் தீர்க்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.
ஏற்றுமதியாளர்களுக்கும் சங்கங்களுக்கும் இடையிலான முறையான உடன்படிக்கைக்கான வரைவை மாகாணக் கூட்டுறவுத் திணைக்களம், பனை அபிவிருத்திச் சபை ஆகியன உடனடியாகத் தயாரித்து வழங்குதல்.
சங்கங்களின் பனங்கள் உற்பத்தியின் தரக்கட்டுப்பாடு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பனை அபிவிருத்திச் சபை வழங்குதல்.
இத்தீர்மானங்களுக்கு அமைவாக, இதுவரையில் முடங்கிக் கிடக்கும் பனங்கள் ஏற்றுமதி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஆளுநர் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர், யாழ். மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், பனை மற்றும் தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




