கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர்

திடீர் திடீரென மாற்றமடையும் காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களைத் துரிதமாகத் தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மட்டத்தில் காலநிலை ஆளுகையை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த உணர்வுள்ள உள்ளூர் ஆட்சி முன்னோடித் திட்டம் தொடர்பான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு, யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் இன்று (09.05.2026) சனிக்கிழமை ஆரம்பமானது. ஜனநாயக மற்றும் ஆளுகைக்கான நிறுவனம் (IDAG), ‘கொன்ராட்-அடினாவர்-ஸ்டிப்டுங்’ (KAS) நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

‘காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் இன்று நேரடியாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். திடீரென ஏற்படும் கனமழை, வெள்ளம் மற்றும் நீண்டகால வறட்சி என்பன எமது வழமையான பருவகால எதிர்வுகூறல்களுக்கு அப்பாற்பட்டதாக மாறிவிட்டன. இம்மாற்றங்கள் எமது மக்களின் உணவுப் பாதுகாப்பையும் இன்று கேள்விக்குறியாக்கியுள்ளன.

குறிப்பாக, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டை உலுக்கிய ‘டித்வா’ பேரிடர் எமது நினைவுகளில் இன்னமும் உள்ளது. மிகக்குறுகிய நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் அழிவுகள் ஏற்பட்டன. இவ்வாறான இயற்கைச் சீற்றங்களை நாம் இனிவரும் காலங்களில் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும். எனவே, கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்டு, வருங்கால சவால்களை எதிர்கொள்வதற்கான முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ‘டித்வா’ பேரிடரின் போது உள்ளூராட்சி மன்றங்கள் களத்தில் நின்று சிறப்பாகச் செயலாற்றியிருந்தன. இருப்பினும், இவ்வாறான சவால்களைத் தற்காலிகமாக அன்றி, நிரந்தரமாக எதிர்கொள்ளும் வகையிலான கட்டமைப்பு ரீதியான தயார்படுத்தல்கள் எமக்குத் தேவை. எமது பாரம்பரிய விவசாய முறைகளைக் கூட காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.

மக்களுடன் நேரடித் தொடர்பிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இவ்வாறான அறிவூட்டல்கள் வழங்கப்படுவது மிகவும் ஆரோக்கியமானது. எதிர்காலத்தில் காலநிலை ஆளுகை தொடர்பாக உள்ளூராட்சி மன்றங்கள் தமக்கேற்ற துணைவிதிகளை உருவாக்கி, தங்களைச் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், எதிர்க்கட்சி மற்றும் சபை உறுப்பினர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் இச்செயலமர்வில் காலநிலை மாற்றம் குறித்த அடிப்படைத் தெளிவு, இலங்கை எதிர்கொள்ளும் பிரதான சவால்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் ஆகியன ஆராயப்படவுள்ளன.

மேலும், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளும் ‘காலநிலைச் செயல் குழுக்களை’ உருவாக்குதல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கான நடைமுறை வழிகாட்டல்களும் இச்செயலமர்வில் விரிவாக வழங்கப்படவுள்ளன.