நெடுந்தீவு பிரதேசத்துக்குச் சென்று பணியாற்றும் அலுவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆபத்துக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவின் ஆலோசகரும், முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரியுமான அசோக பீரிஸ் மற்றும் வடக்குw மாகாண கௌரவ ஆளுநருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (24.04.2026) வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது பொதுநிர்வாக அமைச்சின் அனுமதியுடன் 5,000 ரூபா ஆபத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திலெடுத்து இத்தொகையை அதிகரிக்க வேண்டும். அதேநேரம், ஏனைய கடல் கடந்த தீவுகளான எழுவைதீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஆபத்துக் கொடுப்பனவை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய அரசின் திணைக்கள ஊழியர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று நீண்டகாலமாகப் பணியாற்றியும், மீண்டும் தமது சொந்த மாவட்டத்துக்குத் திரும்ப முடியாத நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு இடமாற்றங்களை வழங்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை திட்டமிடல் சேவை மற்றும் இலங்கை பொறியியல் சேவை ஆகியவற்றுக்கான உத்தியோகத்தர் வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.
ஆளுநரால் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆலோசகர் அசோக பீரிஸ், இவ்விடயங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடி, சாதகமான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.சிறீவாகீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

