வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (15.03.2026) நடைபெற்றது. இந்நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளமை பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் இந்த மோசமான வீதியூடாகவே சுற்றுலாவிகள் கசூரினா கடற்கரைக்கு வந்து சென்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாவிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.

கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இ.சந்திரசேகர் ஆகியோருக்கு மாகாண மக்கள் சார்பில் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே எமது மாவட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கியவர். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அந்த நிதியின் ஊடான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். அதேபோல, அமைச்சர் இ.சந்திரசேகர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முழுவதும் நேரடியாகச் சென்று மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றார். இவர்களின் ஒத்துழைப்புடன் மாகாணத்தின் ஏனைய பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காண முடியும்.

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரால் எமது மாகாண வீதிக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் புத்திசாதுரியமான நடவடிக்கையால் வீதிகளைத் தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டது. தற்போது அவற்றை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழேயே நடைபெறுகின்றன. எனவே, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கின் வீதிப் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றேன், என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சில நிர்வாகச் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்க்கப்படும். யாழ். மாவட்டத்தின் தீவுப் பகுதிகளிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறியுள்ளமையால் அப்பிரதேசங்கள் சோபையிழந்து காணப்படுகின்றன. நாம் தற்போது உட்கட்டமைப்பு அபிவிருத்திகளைச் செய்வதால் அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்தப் பிரதேசங்களில் வந்து குடியமரலாம். மேலும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டே ‘கியூ.ஆர்’ முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போர்ப் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால், அது உள்நாட்டில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்,’ எனக் குறிப்பிட்டார்.

மொத்தம் 7 கிலோமீற்றர் நீளமான காரைநகர் சுற்றுவட்ட வீதியில் 2 கிலோமீற்றர் வீதி ஏற்கனவே புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 5 கிலோமீற்றரில் 2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகளே இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. எஞ்சிய 3 கிலோமீற்றர் நீளமான வீதியானது ‘டித்வா’ மீள்கட்டுமானத் திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டுக்குள் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. இவ்வீதிப் புனரமைப்பின்போது முறையான வடிகாலமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், தாழ்வான இடங்களில் வீதி உயர்த்தப்பட்டுப் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட நிகழ்வில் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர், பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.