Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா

யாழ் மாவட்டத்தில் பெரும்போகம் 2023/2024 இல் உருளைக்கிழங்கு செய்கையில் உள்ளுர் விதை கிழங்கினை நடுகைக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளை கண்டறிவதற்காக மத்திய விவசாயத் திணைக்களத்தினால் 732 kg ரெட் லசோடா உள்ளுர் விதை கிழங்கு சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் , நீர்வேலி , உரும்பிராய், புத்தூர், ஆவரங்கால் , அச்சுவேலி மற்றும் வசாவிளான் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் முன்மாதிரி துண்டமாகச் செய்கை பண்ணப்பட்டது. இவ்விதை உருளைக்கிழங்கானது சீதா எலிய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இழைய வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இழைய வளர்ப்பு விதை கிழங்கு விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு G1 சந்ததி யாழ் மாவட்டத்தில் விவசாயிகள் முன்மாதிரித்துண்டமாக செய்கை பண்ணுவதற்காக விதை கிழங்காக வழங்கப்பட்டு நடுகை மேற்கொள்ளப்பட்டு அறுவடை விழா 08 விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளிலும் நடாத்தப்பட்டு இவ் இனம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வில்லானை மின்சார நிலையவீதி, சுன்னாகத்தில் திரு. த தியாகலிங்கம் அவர்களின் தோட்டத்தில் 06.03.2024 திகதி புதன் கிழமை அன்று வயல் விழா திருமதி மீனலோஜினி பகிரதன், சுன்னாகம் விவசாயப்போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பேராதனை விவசாயத்திணைக்களத்தின் பணிப்பாளர் (விதைகள் மற்றும் நடுகைப்பொருள்) திரு.ச. சதீஸ்வரன் இ .மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர் மேலும் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் உருளை கிழங்கு இன விருத்தியாளர் வற்சலா , பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் கிளிநொச்சியின் உதவி விவசாயப்பணிப்பாளர் யசிக்க மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுகந்தராசா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.அத்துடன் உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அப்பிரதேசத்திற்குரிய கிராம சேவையாளர், விவசாயிகள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

றெட்லசோடா இனம் ஒரு சதுரமீற்றரில் 3.98 கிலோகிராம் விளைவு பெறப்பட்டது. மொத்தமாக 500 சதுரமீற்றரில் இருந்து 975 கிலோ கிராம் விளைவு பெறப்பட்டது. மேலும் இனி வரும் பெரும்போகத்திலும் யாழ் மாவட்டத்தின் விதை கிழங்குத் தேவையின் 30 வீதத்தினையாவது பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக பேராதனை விவசாயத்திணைக்களத்தின் பணிப்பாளர் (விதைகள் மற்றும் நடுகைப்பொருள்) திரு.ச. சதீஸ்வரன் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

மற்றைய விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் நடாத்தப்பட்ட அறுவடை விழாக்களில், யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட விவசாயப்பணிப்பாளர், பேராதனை விவசாயத்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் (விதைகள் மற்றும் நடுகைப்பொருள்), விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர், உதவி விவசாயப்பணிப்பாளர் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் மற்றைய விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளின் முன்மாதிரித்துண்டங்களிலிருந்து பெறப்பட்ட விளைவு பின்வருமாறு.

இல விவசாயப்போதனாசிரியர் பிரிவு முன்மாதிரிச் செய்கை துண்ட விஸ்தீரணம் (சதுர மீற்றர்) மாதிரித் துண்டத்மில் பெறப்பட்ட விளைவு (kg) விளைவு (mt/ha)
01 புத்தூர் 500 1139 22.78
02 ஆவரங்கால் 375 850 22.660
03 வசாவிளான் 500 850 17
04 நீர்வேலி 500 1050 21
05 உரும்பிராய் 375 1050 28
06 சுன்னாகம் 500 975 19.5
07 புன்னாலைக்கட்டுவன் 375 920 24.5
08 அச்சுவேலி 375 1070 28.53
  சராசரி விளைவு     22.92

யாழ் மாவட்டத்தின் சராசரி விளைவாக 18 mt/ha ஆகக்காணப்படுகின்றது இப்புதியஇனமாக முன்மாதிரித்துண்டத்திற்கு வழங்கப்பட்ட உளளுர் றெட்லசோடா இனமானது சராசரியாக 22.9 mt/ha ஆகக் காணப்படுகின்றது. எமது மாவட்டத்தின் எல்லா விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளுக்கும் பொருத்தமான இனமாக காணப்படுகின்றது. மேலும் 60-65 நாட்களில் அறுவடை செய்யும் போது கிழங்குகள் தரமான தாகவும் மேற்பரப்பு அழுத்தமானதாகவும் காணப்பட்டன. எனவே உள்ளுர் றெட்லசோடா விதை கிழங்கானது எமது மாவட்டத்திற்கு பொருத்தமான இனமாக காணப்படுகின்றது. இனி வரும் பெரும்போகத்திலும் யாழ் மாவட்டத்தின் விதை கிழங்குத் தேவையின் 30 வீதத்தினையாவது பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக பேராதனை விவசாயத்திணைக்களத்தின் பணிப்பாளர் (விதைகள் மற்றும் நடுகைப்பொருள்) திரு.ச. சதீஸ்வரன் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.