CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்டத்தில் எள்ளு செய்கையை முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பயனாளிகளிற்கு 1/2 ஏக்கர் வீதம் ANKSE-4 வர்க்க எள்ளு விதைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் வஞ்சியன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் கள்ளியடிப்பிட்டி கிராமத்தில் திரு. மயில்கண்ணன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு 1.5 கிலோ கிராம் எள்ளு விதைகள் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி து. ஆ. ஸ்ரெல்லா விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக எள்ளு செய்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி எள்ளு செய்கையை ஏனைய விவசாயிகளிற்கும் அறிமுகப்படுத்தி எள்ளு செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திரு S.F.C உதயசந்திரன் தலைமையில் 21.03.2024 அன்று வயல்விழா இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கமக்கார அமைப்பு தலைவர்கள் மற்றும் கிராம விவசாயிகளும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட பாட விடய உத்தியோகத்தர் திரு. S.A.J. லெம்பேட் கருத்து தெரிவிக்கையில் எள்ளு செய்கையின் முக்கியத்துவம் உப உணவாக எள்ளில் காணப்படும் போசணை பெறுமானங்கள் போன்ற விடயங்களை கூறியதுடன் எள்ளு செய்கையை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய விவசாய நடைமுறைகள் பூச்சி பீடை தாக்கங்கள் மற்றும் அவற்றிற்கான கட்டுப்பாட்டு நடைமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திரு. S.F.C. உதயசந்திரன் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் தற்சமயம் இதர உப உணவு உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வஞ்சியன்குளம் பகுதியில் பாசிப்பயறு நிலக்கடலை மற்றும் உழுந்து போன்ற பயிர்கள் பயிரிடப்பட்ட போதிலும் எள்ளு செய்கை மேற்கொள்வது இதுவே முதல் தடவையொன்றும் அந்த வகையில் எள்ளு செய்கையை மேற்கொண்ட விவசாயிக்கு தனது பாரட்டுக்களை தெரிவித்ததுடன் ஏனைய விவசாயிகளும் எள்ளு செய்கையை மேற்கொள்ளுமாறும் இதனால் போதியளவு இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

குறித்த நெற்செய்கையில் ஈடுபட்ட திரு. மயில்கண்ணன் தனது அனுபவ பகிர்வில் எள்ளு செய்கை மிகவும் இலகுவானதாக அமைந்ததோடு பூச்சி நோய் தாக்கங்கள் குறைந்தளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் இரண்டு தடவைகள் மாத்திரம் நீர்ப்பாசனத்தை மேற்கொண்டதாக தெரிவித்ததோடு இதனால் ஏனைய விவசாயிகளும் எள்ளு செய்கையை மேற்கொண்டு வெற்றி பெறலாம் என்பதையும் தெரிவித்தார்.

மேலும் குறித்த பகுதி விவசாய போதனாசிரியரால் எள்ளு செய்கை பற்றிய மேலதிக விளக்கங்களை வழங்கியதுடன் களஞ்சியப்படுத்தல் தொடர்பான விளங்கங்களும் வழங்கப்பட்டது.