முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பேரூந்து போக்குவரத்துச் சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான நேரடி களப் பயணத்தை மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை (18.02.2026) காலை இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

இதன்போது மக்களின் கோரிக்கைகளில் உடனடியாக நிறைவேற்றக் கூடியவற்றை விரைந்து செயற்படுத்துவதற்கும், ஏனையவற்றை உரிய கால அவகாசத்தில் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். மேலும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும் ஆளுநர் இணக்கம் வெளியிட்டார்.

இச்சந்திப்பின் போது பிரதேச செயலரால் அபிவிருத்தித் தேவைகளின் முன்னுரிமைப் பட்டியல் முன்வைக்கப்பட்டது. இதில் வீதித் திருத்தங்கள், பாலங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் அமைத்தல், குளப் புனரமைப்பு, யானை வேலி அமைத்தல் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறிப்பாக, மக்களால் முன்வைக்கப்பட்ட போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார். முச்சக்கர வண்டிச் சாரதிகள் சிலரின் அழுத்தங்களால், கடந்த காலங்களில் நடைபெற்ற பேருந்துச் சேவைகள் கூட தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் உரிய நேரத்திற்குப் பயணிக்க முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக உடனடியாகக் கவனமெடுத்து, இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

கல்வித் துறை சார்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், பாடசாலைகளின் பௌதீகத் தேவைப்பாடுகள் தொடர்பில் வலயங்கள் ஊடாகக் களத்தரிசிப்புக்கள் நடத்தித் தேவைகளை அறிக்கையிடுமாறு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதை நினைவூட்டினார். அவ்வாறு முன்னுரிமைப்படுத்தப்படும் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமையால் எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலைமை சீர்செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு இப்பகுதிக்குத் தான் மேற்கொண்ட களப்பயணத்தின் பயனாக ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் திருப்தியளிப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார். விசேடமாக, பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட சிவபுரம் குத்துப்பாலம் மற்றும் கரும்புள்ளியான் வீதி என்பன தற்போது புனரமைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதேபோன்று ஏனைய தேவைகளும் எதிர்காலத்தில் படிப்படியாகப் பூர்த்தி செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலர், மாகாணத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள் (நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, விவசாயம், சுகாதாரம்), வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.