யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது

இன்று (04.10.2024) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், , வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன்,யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ..கேதீஸ்வரன், பிரதேச செயலாளர், இராணுவம், கடற்படை, போலீஸ் போன்றவற்றின் உயர் அதிகாரிகளும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் சேகரிப்பதற்கான கூடுகள் வைக்கப்பட்டதுடன் பதாகைகளும் நாட்டப்பட்டது. தொடர்ந்து அந்தப் பிரதேசங்களில் காணப்பட்ட உக்காத பிளாஸ்டிக் கழிவுகளை அனைவரும் இணைந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதன் போது கோட்டை அகழிகளுக்குள் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதன் போது உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரதேசத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்தது. இந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிளாஸ்டிக், பொலித்தீன் குப்பைகளாலேயே அதிகமாக சூழல் மாசு படுகின்றது. பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்களை பயன்படுத்திவிட்டு அந்த பொருட்களை வீசி எறியாமல் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் இடும் பொழுது இந்த நகர் பிரதேசம் சுத்தமாகவும் அழகாகவும் காணப்படும். எனவே இந்த விடயத்தில் அனைவரும் சூழல் நேயத்துடன் எமது பிரதேசத்தை நேசிப்பவர்களாக வாழப்பழகிக்கொள்ள வேண்டும் எனக் கருத்து உரைத்தார்.

இந்த செயற்பாட்டில் பங்குபற்றிய இராணுவம் போலீஸ் கடற்படை, அரச உத்தியோகஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளையும் கூறினார்.