“காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சூழல் நேயமான நிலைபேறான விவசாய யுகம் நோக்கி” என்ற தொனிப் பொருளில் வடக்கு மாகாண விவசாய கண்காட்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று (02.10.2024) ஆரம்பமாகியது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திரு. இ.இளங்கோவன் அவர்களும், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ம. ஜெகூ அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் அரச. அதிகாரிகள், விவசாயிகள்,பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர், எமது பிரதேசம் விவசாயத்திற்கு சிறந்த பிரதேசமாக விளங்குகின்ற போதும் இன்று விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்து உள்ளது இந்நிலைமையை மாற்றியமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதுடன் விவசாயிகள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நவீன முறைகளை உட்புகுத்த வேண்டிய தேவை உள்ளது. நவீன முறைகளை பின்பற்றாவிட்டால் அவர்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதோடு விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது விவசாயிகளுக்கு முக்கியமான பிரச்சினையாக காணப்படுவது சந்தைப்படுத்தலே. அவர்களின் உற்பத்தியை நியாயமான விலையில் சந்தைப்படுத்துவதற்கு உரிய சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தையில் இடைத் தரகர்களால் அவர்களது உழைப்பு சுரண்டபடுகின்ற நிலையே காணப்படுகின்றது. எனவும் இன்றைய கால இளைஞர்களில் மிகக்குறைவானவர்களே விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் அவர்களது ஆர்வம் குறைந்து வருவதாகவும் இன்றும் வயதானவர்களே விவசாயத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நான் விவசாயத்தில் பங்கு பற்றியவன் என்ற வகையில் விவசாயிகளது பிரச்சனை தனக்கு நன்றாக தெரியும் எனக், கூறியதுடன் தரகர்களின் தலையீடுகள் இயன்ற அளவு தடுக்கப்பட வேண்டும் அதற்காக அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். எனவும் விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட இவ்வாறான கண்காட்சி ஏனைய மாவட்டங்களிலும் மாவட்டங்களுக்கு உரிய பயிர் வகைகளோடு இடம்பெற வேண்டுமெனவும் இக் கண்காட்சி அனைத்து மட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் எனவும் தனது பிரதம விதத்தினர் உரையில் குறிப்பிட்டார்.