வவுனியா மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27.4.2021) காலை 9.00 மணிக்கு வவுனியா மாவட்ட மாநாட்டு மண்டபத்தில்வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உப தலைவருமான கௌரவ கு. திலீபன் மற்றும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ காதர் மஸ்தான், கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் வவுனியா மாவட்ட செயலாளர் , பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச்செயலாளர் மற்றும் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேசசபை தவிசாளர்கள் மற்றும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
முதலாவதாக கமநலசேவைகள் திணைக்களத்தினுடைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதன்போது கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் திருத்தப்படவேண்டிய அனைத்து குளங்களினுடைய பட்டியலை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களுடைய கடிதங்களுடன் மாவட்ட செயலாளருக்கு விரைவில் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் குளங்களில் திருத்த வேலையை மேற்கொள்ளும் போது வாய்க்கால்களையும் சேர்த்து திருத்த வேலைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு முழுமையாக பயன்படும் வகையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அத்துடன் கைவிடப்பட்ட காணிகளை விவசாய செய்கைகளுக்கு உட்படுத்தும்போது அந்தக் காணிகளுடைய உரிமையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாத வகையில் அத்திட்டத்தை மேற்கொள்ளுமாறும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பயனாளியுடன் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன் கைவிடப்பட்ட காணிகளை வெவ்வேறு பயிற்செய்கைகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அடையாளப்படுத்தி வகைப்படுத்துமாறும் தெரிவித்தார்.
அடுத்ததாக நீர்ப்பாசன திணைக்களத்தினுடைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்போது கௌரவ ஆளுநர் அவர்கள் பாவற்குளம் கால்வாய் மறுசிரமைப்பு மற்றும் குளத்திற்காக ஒதுக்கப்படும் நிதிகள் பற்றி கேட்டறிந்து கொண்டார். மேலும் சிறுபோக நெற்செய்கைக்கு பயன்படுத்தப்படும் வயல் நிலங்கள் தவிர்ந்த ஏனைய வயல் நிலங்களில்(OHC) பயிற்செய்கையை மேற்கொள்வதற்கான சாத்திய வள ஆய்வினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக கல்வித்துறை தொடர்டபிலான கலந்துரையாடலில் ஆசிரிய ஆளணி தொடர்பில் கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் ஆளணி வெற்றிடங்கள் வெகுவிரைவில் நிரப்பப்படும் எனவும் நியமனம் பெற்ற ஆசிரியர் பாடசாலைக்கு சமூமளித்தல் தொடர்பாகவும் மாணவர்களின் வரவு மற்றும் பாடவேளைகள் தொடர்பாக திட்டமிடல் ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு வலயகல்விப்பணிப்பாளருக்கு காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து ,டர்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் இலங்கை போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடி போக்குவரத்து வழித்தளங்களினை ஒழுங்கமைத்துதருவதாக உறுதியளித்தார்.
சுகாரத்துறை தொடர்பான கலந்துரையாடலின் போது ஆரம்பசுகாதார அபிவிருத்தியில் வைத்தியர்களுக்கான தங்குமிடவசதிகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் உள்ளுராட்சி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்திதொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.